இலங்கையின் வடபகுதியில் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழ் அகதிகளின் நிலை மிகவும் மோசமானதாக இருப்பதாகவும் , அங்குள்ள பெண்கள் அகதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம் ஒன்றில் அவர்கள் பலாத்காரமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டிருப்பதாகவும் ஆஸ்ட்ரேலியாவின் பிரபல நாளேடான 'த ஆஸ்ட்ரேலியன்', அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ள 'த ஆஸ்ட்ரேலியன்', புல்மோட்டையில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பெண்களே அதிகாரிகளால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றது.
இது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமும், உதவி நிறுவனங்களும் இணைந்து விசாரணைகளை நடத்திவருவதாகவும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இருந்த போதிலும் யாரும் இது தொடர்பாக எதனையும் செய்யவில்லை" என தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத உதவி நிறுவனப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.
"இந்த அகதி முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள கூடாரம் ஒன்றில் சராசரியாக மூன்று குடும்பங்கள் தங்கியிருக்கின்றன. இந்நிலையில் அவர்கள் மற்றவர்களுடைய இடையூறுகள் இல்லாமல் அவற்றில் வசிக்க முடியாது.இந்நிலையில் அங்கு வரும் இராணுவத்தினர் அவர்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கோ அல்லது மேலதிக இடத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கோ கைமாறாக எதனையாவது எதிர்பார்க்கின்றார்கள்" எனவும் அந்த உதவி நிறுவனப் பணியாளர் சுட்டிக்காட்டுகின்றார்.
"இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் முற்றிலும் தவறானவை" என திட்டவட்டமாக மறுக்கும் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோகன்ன, இருந்தபோதிலும் இது தொடர்பாக அரசு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது என்பதையும் உறுதிப்படுத்தினார்.
"படையினர் இந்தப் போரில் வெற்றிபெற்றுள்ளார்கள்.அவர்கள் விரும்பியிருந்தால் அவர்கள் சென்ற பாதையில் ஒவ்வொரு பெண்ணையும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியிருக்க முடியும்.ஆனால் எந்த ஒரு பாலியல் வல்லுறவுச் சம்பவமும் இடம்பெறவில்லை" என அவர் கூறியுள்ளார்.
இந்த முகாம்களில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஒருவர், இதில் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் என நம்பப்படும் ஆண்களும், பெண்களும் அங்கிருந்து வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்தார். |