
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் செயல்படும் தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கப் படையினர் இன்று பிற்பகல் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 38 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இன்று மதியம் 2.53 மணியளவில் முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கப் படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 பேர் உயிரிழந்ததாகவும் மருத்துவமனை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை வளாகத்தின் மீது ஏராளமான எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததாகவும், இத்தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளதாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளர் புலித்தேவனை தொடர்புக் கொண்டு இதுபற்றி கேட்ட போது, சிறிலங்கப் படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாககுதலில், மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை வழங்கும் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 39 பெண்கள் உயிரிழந்ததாகவும், 40க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் கூறினார்.
கடந்த ஒரு வார காலத்திற்கு உள்ளாக முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனை மீது 3 முறை சிறிலங்கப் படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
|