
இலங்கையில் வன்னிப் பகுதியில் பாதுகாப்பு வலயத்திலுள்ள முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட இடங்களைக் குறிவைத்து கடந்த இரண்டு நாட்களாக சிறிலங்க இராணுவம் நடத்திவரும் கடும் தாக்குதலில் பொது மக்கள் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.பாதுகாப்பு வலயப் பகுதிகளின் மீது பீரங்கி உள்ளிட்ட கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று சர்வதேச சமூகத்திற்கு அறிவித்த சிறிலங்க அரசு, பீரங்கி, பல்குழல் பீரங்கிகள், எறிகணைகள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி கடந்த இரண்டு நாட்களாக தாக்கி வருவது மட்டுமின்றி, ஒரே இடத்தில் பல குண்டுகளாக சிதறி பிறகு வெடிக்கும் கொத்துக் குண்டுகளையும் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஒரு பக்கத்தில் உணவும், மருந்தும் இன்றி செத்துக் கொண்டிருக்கும் மக்கள், தங்களுக்கு கிடைக்கும் குறைந்த அளவு உணவிற்காக வரிசையில் நின்றிருந்த நேரத்தில் அவர்கள் மீது குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உளவு விமானங்களைக் கொண்டு கண்காணித்து, அது தரும் தகவலைக் கொண்டு மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் கடுமையாக தாதகுதல் நடத்தியுள்ளது சிறிலங்க இராணுவம். சிறிலங்க படையினரின் தாக்குதலில் உயிரிழந்த, காயமுற்ற மக்களின் நிலையை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவிலும், புகைப்படங்களிலும் காணலாம்.
|