அரசியல் ஆதாயத்திற்காகத் தூண்டப்பட்டுள்ள சிறிலங்க இராணுவப்படை ஜனவரி 2ஆம் தேதி கிளிநொச்சி நகரத்தை ஆக்கிரமித்தது. சிறிலங்க ஆயுதப் படைகள் துவக்கியுள்ள 'வன்னி ஆபரேஷன்' எனப்படும் மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையின் ஒரு பகுதிதான் இது; கடந்த 2007 பிப்ரவரியில் துவக்கப்பட்ட இந்நடவடிக்கை இன்னும் முடியாமல் 23 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இருந்தாலும், சில நாட்களுக்கு முன்பே கிளிநொச்சியைக் காலி செய்துவிட்ட தமிழீழ விடுதலைப் புலிகள், தங்களின் போராளிகளையும் கனரக ஆயுதங்களையும் இன்னும் வடகிழக்காக நகர்த்திவிட்டனர்.
தெற்கில் பல்வேறு நகரங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டும், இனிப்புக்கள் பறிமாறப்பட்டும், பொது இடங்களில் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டும் கிளிநொச்சி ஆக்கிரமிக்கப்பட்ட நிகழ்வு கொண்டாடப்பட்டது. முன்னதாகவே கொழும்புவில் தொலைக்காட்சிகளும் வானொலிகளும் உடனடிச் செய்திகளை வெளியிட்டன, செல்பேசிக் குறுந்தகவல்கள் கூடப் பறந்தன.
ஈழப் போரில் கிளிநொச்சி நகரம் வீழ்வது புதிதல்ல; 1996 செப்டம்பரில் சத் ஜெயா நடவடிக்கையின் மூன்றாவது கட்டத்தில் சிறிலங்க இராணுவத்தினர் இந்நகரத்தைக் கைப்பற்றினர். இருந்தாலும், ஓயாத அலைகள் -2 மூலமாக புலிகள் 1998 செப்டம்பரில் கிளிநொச்சியை மீண்டும் தங்கள் வசப்படுத்தினர்.
அப்படியானால் பிறகு எதற்கு இந்த வெடிகளும் கொண்டாட்டங்களும்....?
வடக்கு மத்திய மற்றும் மத்திய மாகாணங்களுக்கு பிப்ரவரி 14 அன்று நடக்கவிருக்கிற மாகாணக் கவுன்சில் தேர்தல்களை முன்னிட்டுத்தான் இந்தத் தேச அளவிலான கொண்டாட்டங்களும், வாண வேடிக்கைகளும். வரவிருக்கும் மாகாணக் கவுன்சில் தேர்தல்களை முன்னிட்டு அரசும் எதிர்க்கட்சிகளும் வேகமாகத் தயாராகி வருகின்றன. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைத் தங்களின் ஆயுதமாக எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ள நிலையில், அரசோ 'தமிழர்கள் மீதான போரை'த் தனது கவசமாகத் தேர்ந்தெடுத்துள்ளது. இன்னும் அதிகமாக, வடக்கில் நடந்து வரும் போரின் துணையுடன் தனது அரசியல் பிரச்சனைகளைச் சமாளித்துத் தெற்கில் தனது அரசியல் பிடியை உறுதியாக்கிக்கொள்ள மகிந்த அரசு முயற்சிக்கிறது. இவை எல்லாம்தான் கொண்டாட்டங்களுக்குப் பின்னால் உள்ள மர்மங்கள். |