விடுதலைப் புலிகளுடன் 2007 ஆண்டு நடந்த சண்டைகளில் மட்டும் சிறிலங்க ராணுவத்தைச் சேர்ந்த 2,000 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 4,000 படையினர் காயமடைந்துள்ளதாகவும் சிறிலங்க ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா, ராணுவத் தலைமையகத்தில் கடந்த வாரம் நடந்த மாநாட்டில் தெரிவித்ததாக சண்டே டைம்ஸ் இதழ் தெரிவிக்கிறது.
ராணுவ அதிகாரிகள் ஊடகங்களுக்குப் பேட்டியளிப்பதற்குத் தடை விதித்துள்ள சிறிலங்க அரசு, ஊடகங்களுக்கு விவரங்களை அளிக்கும் அதிகாரிகளைத் தேடும் நடவடிக்கையைத் துவங்கியுள்ளதாகவும், ரட்மலான விமான நிலையத்தில் இருந்து கொழும்பு மருத்துவமனைக்கு காயமடைந்த படையினரைக் கொண்டுவரும் மருத்துவ ஊர்திகள் சைரன்களைப் பயன்படுத்தக் கூடாது என்று அரசு அறிவுத்தியுள்ளதாகவும் அவ்விதழ் கூறுகிறது.
ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒருமுறை ராணுவத் தலைமையகத்தில் நடக்கும் மாநாட்டில் முதன்மை ராணுவ அதிகாரிகள், இயக்குநர்கள் மத்தியில் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா உரையாற்றினார்.
90 நிமிடங்கள் நீடித்த இம்மாநாட்டில், போர்க்களப் பின்னடைவுகள் பற்றிய தகவல்களை ஊடகங்களுக்குக் கசியவிடும் ராணுவ அதிகாரிகளின் மீது அரசுக்கு உள்ள கோபம் பற்றிப் பேசுகையில், "நாங்கள் இந்த விவரங்களை (2007 ஆம் ஆண்டு சேதங்கள்) ஊடகங்களுக்குக் கொடுக்கவில்லை. இங்குள்ளவர்களில் யாராவது தர விரும்பினால் தாரளமாகத் தரலாம்" என்றார் அவர்.
ராணுவத்தினரின் வெற்றிகளை ஊதிப் பெரிதாக்குகிறார் என்று ஊடகங்களால் குற்றம்சாற்றப்பட்டுள்ள ராவணுத் தளபதி சரத் ஃபொன்சேகா, ஊழலை ஒழிப்பது பற்றியும், ஒழுக்கத்தின் தேவை பற்றியும் விரிவாகப் பேசியுள்ளார் என்று சண்டே டைம்ஸ் கூறுகிறது.
கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் நடந்த மோதலில் சிறிலங்கப் படையினருக்கு ஏற்பட்ட இழப்புகளைப் பல்வேறு தகவல்கள் வெளியாகின.
இத்தாக்குதலில் 47 படையினர் கொல்லப்பட்டதுடன், 126 படையினர் காயமடைந்ததாக சரத் ஃபொன்சேகா கூறிய அதே நேரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் 355 படையினர் படுகாயமடைந்ததாக சண்டே டைம்ஸ் கூறியது.
|