உலகம் வெப்பமயமாதலை தடுக்க '99999' விழிப்புணர்வு: மேயர் வேண்டுகோள்
சென்னை௦௦:, திங்கள், 7 செப்டம்பர் 2009( 20:05 IST )
உலக வெப்பமயமாதலை தடுக்க, வரும் 9 தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கை அணைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி மேயர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உலகம் வெப்பமயமாதலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் எக்ஸ்னோரா அமைப்பு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு '88888' என ஒரு மாபெரும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இரவு 8 மணிக்கு 8 நிமிடங்கள் விளக்கு அணைக்கப்பட்டது.
அதேபோன்று, இந்த ஆண்டு '99999' என விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, வரும் 9ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் 99 முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அரசியல் பிரமுகர்கள், கலைத்துறை சேர்ந்தவர்கள், விளையாட்டு வீரர்கள், பத்திரிகை துறையை சேர்ந்தவர்கள், கவிஞர்கள், போன்ற பல்வேறு துறையின் வல்லுநர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வர்.
இந்தக் கூட்டத்தில் உலகம் வெப்பமயமாதல் பற்றியும், அதன் தீர்வுகள் பற்றியும் கருத்துக்கள் எடுத்துரைக்கப்படும். சிங்காரச் சென்னை என்ற பொது இலட்சியத்தை அடைய தங்கள் பங்களிப்பும் குறித்தும் உறுதி செய்வார்கள். இரவு சரியாக 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கு அணைக்கப்படும்.
சென்னை மாநகராட்சி கட்டடங்கள், பள்ளிக்கூடங்கள், பூங்காக்கள் என 2000 கட்டடங்களில் விளக்குகள் அணைக்கப்படும். அதே போன்று 313 மாநகராட்சி பள்ளிகள், 1,500 பூங்காக்களில் விளக்குகள் அணைக்கப்பட்டு உலகம் வெப்பமயமாதல் குறித்து பொதுமக்கள் அறிந்திடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
பூமி வெப்பமயமாவதை தவிர்க்க அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். சென்னை மாநகராட்சியுடன், எக்ஸ்னோரா அமைப்பும் சேர்ந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துகிறது.