உலக அளவில் கச்சா எண்ணெய் வளம் குறைந்துவரும் நிலையில் நமது நாட்டின் எரிசக்தித் தேவையை நிறைவு செய்ய அணு சக்தி மிக அவசியம் என்று அணு விஞ்ஞானி ஆர். சிதம்பரம் கூறினார்.
திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலையில் ‘அணு சக்தியும், எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் வானிலை மாற்றமும்’ என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்திய இந்திய அரசின் தலைமை விஞ்ஞான ஆலோசகர் ஆர். சிதம்பரம், நமது நாட்டின் எதிர்கால மின் சக்தித் தேவைக்கு அணு சக்தி மிக அவசியம் என்று கூறினார்.
1956ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் அணு உலை நிறுவப்பட்டதில் இருந்து கடைபிடிக்கப்படும் இந்தியாவின் 3 கட்ட அணு சக்திக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறிய சிதம்பரம், விரைவி்ல் அணு சக்தி ஆளுமையில் இந்தியா முழுமை பெறும் என்று கூறினார்.
புவி வெப்பமடைதலிற்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தில் உலக நாடுகளின் சராசரி 4.28 விழுக்காடாக உள்ள நிலையில் இந்தியாவின் வெளியேற்றம் 1.02 விழுக்காடாக மட்டுமே உள்ளது என்று கூறினார்.
சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத ஒரு தூய்மையான எரி சக்தியாக அணு சக்தி உள்ளதென்றும் சிதம்பரம் கூறினார். |