தனிஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் மகாகவி பாரதியார். ஆனால் உணவை விடவும் உயிர்வாழ அடிப்படை ஆதாரமானது தண்ணீர் ஆகும்.
தற்போதைய பன்னாட்டு, உள்நாட்டுச் சட்டங்கள் எதிலும் தண்ணீர் என்பது மனித உரிமை என்ற முழக்கத்தை வைக்கும் ஷரத்துக்கள் இல்லை.
ஆனால் ஏற்கனவே இருக்கும் சில ஒப்பந்த மரபு வழக்குகளின் அடிப்படையில் குடிநீர் மனித உரிமை என்பதை நாம் வருவித்துக் கொள்ள முடியும்.
சர்வதேச பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள் (1966), பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிக்கும் மரபு ஒப்பந்தம் (1977), மேலும் குழந்தைகள் உரிமைகள் மரபு ஒப்பந்தம் (1989) ஆகியவற்றின் குடிநீர் அடிப்படை மனித உரிமை என்ற விஷயத்தை நாம் வருவித்துக் கொள்ள முடியும்.
2010ஆம் ஆண்டு ஐ.நா. பொதுக்குழு கூட்டம் இது குறித்து விரிவான தீர்மானத்தை நிறைவேற்றி அனைத்து நாடுகளுக்கும் சுத்தமான குடிநீர், சுகாதாரமான சுற்றுச் சூழலுக்கான உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு என்று அறிவுறுத்தியது.
வழக்கம் போல் ஐ.நா. போடும் பல்வேறு தீர்மானங்கள் நம் அரசியல் கட்சிகள் போடும் தீர்மானத்தை விடவும் தமாஷாகப் போய்விட்டது.
பொருளாதார முன்னேற்றம், கார்ப்பரேட் கொள்ளை என்ற உலகமயப் பொருளாதாரச் சுரண்டல் வர்த்தகத்தில் வளரும் நாடுகளின் இயற்கை, செயற்கை ஆதாரங்கள் அனைத்தியும் அழித்து கொள்ளை லாபம் ஈட்டி வரும் ஒரு சில தனிநபர் முதலாளிகளைத் தவிர வேறு என்ன இந்த மனித உலகம் கண்டு விட்டது!
ஐ.நா.வின் இந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்தது. ஆனால் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஏதோ காரணங்களைக் கூறி வாக்களிக்க மறுத்துள்ளது.
இந்தியாவில் குடிநீர் பிரச்சனைகளைப் பேசிக்கொண்டே, இந்தியாவின் ஒட்டுமொத்த நீராதாரங்களின் அளவு என்ன என்பது குறித்த்து தனி நபர், பல்கலைக் கழக மட்ட ஆய்வுகளை துவக்கி வைத்துக் கொண்டே, பெப்சி, கோககோலா நிறுவனங்கள் நம் நீர் ஆதாரங்களைச் சுரண்ட வழி வகை செய்து வந்துள்ளது நமது பேயரசுகாள்.
இதில் வேடிக்கை என்னவெனில் பல நாடுகளுக்கு நீர் என்பது அடிப்படை மனித உரிமை என்ற ஐ.நா. தீர்மானமே தெரியாமல் இருந்து வருகிறது என்பதே.
ஐ.நா.வின் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான அறிகுறிகள் எந்த நாட்டிலும் இதுவரை காணப்படவில்லை.