தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | த‌மிழக‌ம் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வா‌னிலை மாநாடு | நே‌ர்முக‌ம்
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » நாடும் நடப்பும் » லோக்பால் மசோதா மக்களை ஏமாற்றவா? (Is Lokpal Bill to deceive people?)
முந்தையது|அடுத்தது
ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து நாளைக்கே நாட்டில் ஊழல் ஒழியப்போகிறது என்பது ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்திய மத்தியில் ஆட்சியிலுள்ள காங்கிரஸ் அரசு, தற்போது ஊழல் செய்தாலும் பிரதமர், நீதிபதிகள், எம்.பி.க்கள் ஆகியோரை லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வர கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதன் மூலம் அதன் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

லோக்பால் மசோதா வரைவுக் குழுவின் 5 வது கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்.பி.க்களை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது லோக்பால் வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்.பிக்களை கொண்டு வருவதற்கு அக்குழுவில் குடிமக்கள் சார்பில் இடம் பெற்ற பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்த நிலையில்,மத்திய அரசு சார்பில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டும், இந்த விவகாரத்தில் இரு தரப்பினர் இடையே இறுதிவரை ஒருமித்தக் கருத்து ஏற்படவில்லை.இதையடுத்து வருகிற ஜூன் 6 ஆம் தேதி மீண்டும் கூடி ஆலோசிப்பதென முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து லோக்பால் மசோதா வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்.பி.க்களை கொண்டு வருவது குறித்து அனைத்து மாநில அரசுகள், அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது லோக்பால் மசோதா உருவாக்குவதை மேலும் இழுத்தடிக்க மத்திய அரசு கையாளும் ஒருவித தந்திரம் என்றே கூறப்படுகிறது.

ஊழல் செய்தால் பிரதமர், நீதிபதிகள் மற்றும் எம்.பி.க்களை லோக்பால் மசோதா வரம்புக்குள் கொண்டுவரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய அரசு,வழக்கம்போல எளிதில் மூளைச் சலவைக்கு உள்ளாக்கப்படும் அல்லது மூளைச் சலவை செய்யப்பட்ட மத்திய தர வர்க்க மக்களை திருப்திபடுத்துவதன் மூலம், ஊழல் ஒழிக்கப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
முந்தையது|அடுத்தது
மேலும் படிக்க