வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 இலட்சம் ஈழத் தமிழர்களில் 1,19,000 பேரை அவர்கள் வாழ்விடங்களில் மீள் குடியமர்த்தியுள்ளோம் என்று சிறிலங்க அரசு கூறியுள்ள நிலையில், முகாமிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் அனுபவித்துவரும் இன்னல்களை நேரில் கண்டு விவரித்துள்ளது கிரவுண்ட் வியூவ்ஸ் என்கிற இணையத் தளம்.
கிரவுண்ட் வியூவ்ஸ் என்கிற இந்த இணையத் தளத்தை சிறிலங்கப் பத்திரிக்கையாளர்களே நடத்திவருகின்றனர். இதன் ஒரு பத்திரிக்கையாளருக்கு கடந்த வாரம் மாணிக்கம் பண்ணை முகாமிற்கும், கிளிநொச்சி, மன்னார் பகுதிகளுக்குச் சென்றுவரும் வாய்ப்பு கிட்டியுள்ளது. தனது பயணத்தில் கண்டதை உள்ளது உள்ளவாறு விவரித்துள்ளார்.
அங்கு எல்லாம் நன்றாக இருக்கிறது என்று இங்கு தமிழகத்தின் முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார். ஈழத் தமிழர்களின் மறுவாழ்விற்கு இந்தியா உதவுவதாக ஒரு தோற்றமும் காட்டப்படுகிறது. அவர்களின் மறுவாழ்விற்காக உதவுகிறோம் என்று சிறிலங்க சிங்கள அரசும் கூறுகிறது.
ஆனால் மீள் குடியமர்த்தல் என்ற பெயரில் அவர்கள் அனுபவித்துவரும் துயரத்தை இந்தப் பத்திரிக்கையாளர் விவரித்துள்ளார். அந்த விவரிப்பின் முக்கியப் பகுதிகள் இங்கு அளிக்கப்பட்டுள்ளது.
“கடந்த வாரம் எங்களில் சிலர் மன்னார், கிளிநொச்சி பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படும் வாய்ப்பைப் பெற்றோம். வன்னியிலுள்ள மனிக் ஃபார்ம் என்றழைக்கப்படும் மாணிக்கம் பண்ணைக்கும் அழைத்துச் செல்லப்பட்டோம்.
மாணிக்கம் பண்ணையிலிருந்து வெளியேற்றப்படும் மக்களை பன்னாட்டு இடம்பெயர்வு அமைப்பு (International Organization for Migrants) பேருந்துகளில் ஏற்றி, அவர்கள் வாழ்விடங்களுக்கோ அல்லது வேறொரு தற்காலிக முகாமான வவுனியா ஊரகப் பேரவைக்கோ அல்லது அம்மக்களை மறு சோதனைக்கு உட்படுத்தவோ கொண்டு செல்கிறது.
FILE
நாங்கள் கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு வவுனியா வந்தோம். அப்போது அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் மாணிக்கம் பண்ணையிலிருந்து இடம்பெயர்ந்தோர் பேருந்துகளில் அங்கு அழைத்துவரப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் வவுனியா ஊரகப் பேரவை மைதானத்திலிருந்த கூரையின் கீழ் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களைக் கொண்டு வந்த பேருந்துகளில் ஐஓஎம் என்று பன்னாட்டு இடம்பெயர்வு அமைப்பின் பெயர் ஒட்டப்பட்டிருந்தது.
அவர்கள் யாரோடும் எங்களால் பேச முடியவில்லை, அவர்களைச் சுற்றி சிறிலங்க இராணுவத்தினர் நின்றுகொண்டிருந்தனர். சிறிது நேர முயற்சிக்குப் பின் 13 பேரிடம் பேசினேன். அவர்களில் பலர் பெண்கள். இவர்களின் குடும்பத்தில் குறைந்தது ஒருவராவது போரிலோ அல்லது அதற்கு முன்னரோ கொல்லப்பட்டவர்களாகவோ அல்லது சோதனைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்டு மீ்ண்டும் திரும்பதவராகவோ இருப்பதை அறிந்தோம். தங்கள் குடும்ப உறுப்பினர் திரும்பாதது குறித்து இரண்டு பெண்கள் மட்டுமே பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்திடம் புகார் செய்ய முடிந்தது. தன்னுடைய சகோதரி ஒருவரை (விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்) பம்பை மது மறுவாழ்வு மையத்தில் ஒரு முறை பார்த்ததாகவும், அவரைக் காண மறுமுறை சென்றபோது, அவரை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டதாக கூறிய அதிகாரி ஒருவர், மேற்கொண்டு எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லையென்றும் கூறியதாக எங்களிடம் கூறினார்.