சிறிலங்க நாடாளுமன்றத்திற்கு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அதிபர் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து தற்போது அந்நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதியாகவுள்ள சரத் பொன்சேகாவை நிறுத்துவது என்று எதிர்க்கட்சிகள் கூட்டணி முடிவெடுத்திருப்பதாக வரும் செய்திகள் தென் இலங்கைக் கட்சிகளின் சிங்கள இனவெறி அரசியலிற்கு அத்தாட்சியாகும்.
FILE
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று சித்தரித்து, அதற்கு எதிராகத்தான் சிறிலங்க அரசு போர்த்தொடுத்துள்ளது என்று உலக நாடுகளை நம்பவைத்து, இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய தெற்காசிய வல்லாதிக்கங்களின் துணையுடன் தமிழினப் படுகொலையை நடத்தி முடித்ததை தனது ‘வெற்றி’யாகக் கொண்டாடிய அதிபர் ராஜபக்சாவும் அவருடைய சகோதரர்களும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான தங்களது வெ(ற்)றியை தேர்தல் வெற்றியாக மாற்றிக் கொள்ளும் தீவிரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ராஜபக்சாவின் தேர்தல் வெற்றியைத் தடுத்து நிறுத்த, ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்ததில் முன்னணியில் நின்ற இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவை வேட்பாளராக்குவதன் மூலம் சிங்கள பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெரும் வியூகத்தை எதிர்கட்சிக் கூட்டணி வகுத்துள்ளது.
சிறிலங்க அரசியலில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், அந்நாட்டு முன்னாள் பிரதமருமான ரனில் விக்கிரமசிங்கே, ஆளும் சிறிலங்க சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கவுள்ள மகிந்தாவின் வெற்றியைத் தட்டிப் பறிக்க வகுத்த தேர்தல் வியூகமே சரத் பொன்சேகாவை அதிபர் வேட்பாளராக நிறுத்துவது என்பதாகும்.
FILE
ரனில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்க முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்க மக்கள் சுதந்திரக் கட்சியின் தலைவர் மங்கள சமரவீரா ஆகிய கட்சிகள் தலைமையிலான கூட்டணி சரத் பொன்சேகாவை வேட்பாளராக்குவதில் ஒருமித்த கருத்து கொண்டுள்ளன.
சரத் பொன்சேகா வேட்பாளராக நிறுத்தப்பட்டால் ஆதரிக்கத் தயார் என்று ஈழத் தமிழர்களுக்கு எந்த உரிமையும் அளிக்கக் கூடாது என்று வெளிப்படையாக அரசியல் நடத்திவரும் ஜனதா விமுக்தி பெரமுணா என்றழைக்கப்படும் பொதுவுடமைக் கொள்கை கொண்ட கட்சியும் (!), புத்த பிக்குகளின் அரசியல் அமைப்பான ஜாதிக ஹேல உருமயாவும் அறிவித்துள்ளன.
“சிறிலங்க சிங்கள மக்களின் தேசம்தான். இதனை இங்கு வாழும் தமிழர்கள் உட்பட மற்ற இனங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களே. ஒப்புக் கொண்டால் இருக்கலாம், இல்லையேல் வெளியேறலாம்” என்று ஊடகங்களுக்கு வெளிப்படையாகப் பேட்டியளித்தவரல்லவா சரத் பொன்சேகா! பிறகு அவரை விட சிறந்த சிங்கள இனவெறியாளரை எங்கு போய் இந்த எதிர்க்கட்சிகள் தேட முடியும்?
எனவே ஆளும், எதிர்க் கட்சிகளைக் கொண்ட இரண்டு கூட்டணிகளுமே முன்வைக்கும் முக்கிய தேர்தல் முழக்கம் ஈழத் தமிழர்களை அழித்தொழித்த இனப் படுகொலைப் போரில் பெற்ற வெற்றிக்காக ‘பெரும்பங்காற்றிய’ இவருக்கு வாக்களியுங்கள் என்பதே!
இலங்கையில் பெரும்பான்மையாகவுள்ள சிங்கள வாக்காளர்கள், தங்கள் வாக்குகளை யாருக்கு அளிப்பது என்பதை, தமிழர்களுக்கு எதிரான போரில் பெற்ற வெற்றிக்கு காரணகர்த்தா யார்? என்பதை ‘சீர்தூக்கிப் பார்த்து’ வாக்களிக்க வேண்டும்!