ஈழத் தமிழருக்கு என்ன செய்ய வேண்டும்: சச்சிதானந்தன்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
புதன், 4 நவம்பர் 2009( 18:53 IST )
WD
தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் வா(டு)ழும் ஈழத் தமிழர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பை மறவன்புலவு க. சச்சிதானந்தன் தொகுத்துக் கூறியுள்ளார்.
1. கள நிலை!
1.1 அகதிகளாக வாழும் காலப் பகுதி 26 ஆண்டுகள் (1983-2009)
1.2 முகாம்களின் எண்ணிக்கை: 26 மாவட்டங்களில் 115.
1.3 முகாம்களுள் வாழ்வோர் தொகை: 19,340 குடும்பங்களைச் சேர்ந்த 73,241 பேர். (2.11.2009)
1.4 முகாம்களுக்கு வெளியே 11,288 குடும்பங்களைச் சேர்ந்த 31,802 பேர். (2.11.2009).
1.5 காவல்துறையில் பதிவுபெற்ற ஏறத்தாழ 1,00,000 பேர் வாடகைக் குடியிருப்புகளில் தமிழகமெங்கும்.
1.6 யாவரும் ஈழத் தமிழர். 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் சிங்கள இன வெறித் தாக்குதல்களால் உயிரச்சம் மேவத் தப்பி வந்தவர்கள்.
1.7 இன்றுள்ள இலங்கை அரசியல் சூழ்நிலை தொடருமானால், அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தாமாக இவர்கள் இலங்கைக்குத் திரும்பும் வாய்ப்பே இல்லை.
2. வாழ் தகுதி
2.1 இவர்களுட் பலரிடம் முகாம் பதிவு அட்டை உண்டு. பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், இலங்கையில் வாழ்ந்ததற்கான சான்றிதழ் என எதுவும் இல்லை. ஆதாரச் சான்றிதழ் கோரும் விதிகளைப் புறந்தள்ளி, கட்டணம் எதுவும் கேட்காமல், முகாம் பதிவு அட்டையைச் சான்றாகக் கொண்டு இவர்களுக்கு உடனடியாக 5 அல்லது 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் அனைத்துலகப் பயண இலங்கைக் கடவுச் சீட்டை (Sri Lankan passport valid for 10 years for all countries) சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் வழங்கவேண்டும். இந்திய நடுவண் அரசு இதை இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
2.2 முகாம் வழங்கிய அட்டையைச் சான்றாகக் கொண்டு, அகதியாக வந்து சேர்ந்த நாள், பிறந்த நாள், பிறப்பிட முகவரி ஆகிய விவரங்களுடன் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் நிலையான வதிவுரிமை அட்டையை (Permanent Resident Card), இந்திய நடுவண் அரசு வழங்கவேண்டும். வாக்குரிமை, பெருந்தோட்ட நிலங்களையும் வேளாண் நிலங்களையும் மட்டும் விலைக்கு வாங்கும் சொத்துரிமை ஆகிய உரிமைகள் தவிர்ந்த அனைத்து உரிமைகளையும் கொண்ட தகுதியை இந்த அட்டை வழங்கும். இப்பொழுதுள்ள இந்தியச் சட்டங்களுள் இந்த அட்டையை வழங்கலாம். ஏற்கனவே இந்திய அரசு இத்தகைய அட்டைகளை (PIO), இதே உரிமைகளுடன் வெளிநாடு வாழ் இந்தியருக்கு வழங்கி வருகிறது.
2.3 முகாம்களிலுள்ள ஈழத் தமிழர், இலங்கைக் கடவுச் சீட்டுடன் இலங்கை தவிர்ந்த பிற நாடுகளுக்குப் பயணம் செய்தபின், நிலையான வதிவுரிமை அட்டை இருப்பதால் இந்தியாவுக்கு மீளலாம். புகலிடம் கொடுக்கும் பல நாடுகள் தம்மிடம் வரும் அகதிகளுக்கு இந்த வசதியைக் கொடுத்து வருகின்றன.
2.4 காவல்துறைப் பதிவுமுறையில் மாற்றம் கொணர்ந்து, புகைப்படம் ஒட்டிய காவல்துறைப் பதிவு அட்டையை வழங்கவேண்டும். பதிவுக்கு விண்ணப்பித்த ஒரு வாரத்துள் தகுதியெனில் காவல்துறைப் பதிவட்டை வழங்கும் நடைமுறை வேண்டும்.
3. வாழ்விடம் (கூழும் கூறையும் கூரையும்)
3.1 இந்த 30,000 குடும்பங்களுட் பலர், கடந்த 26 ஆண்டுகளாக முகாம்களுக்குள் வாழ்கின்றார்கள். இவர்களுக்கு அரச நிலங்களில் (சமத்துவபுரங்கள் போலக்) குடியிருப்புகள் அமைத்து, கழிவறை, குழாய் நீர், மின்சாரம், சமையல் வாயு இணைப்பு உள்ள 35,000 இரண்டு அறைக் கல்வீடுகளைக் கட்டிக் கொடுத்துக் குடியமர்த்தவேண்டும். இதற்காக ஐ.நா. அகதி ஆணையரிடம் (UNHCR) கேட்டாலோ, புலம்பெயர் ஈழத் தமிழரிடம் கேட்டாலோ நிதி கிடைக்கும். இத்தகைய வாழ்விட வசதிகள் அமையும் கால எல்லையாக 2010 ஆனி அமையவேண்டும்.
3.2 அடைக்கலம் கேட்டுப் புதிதாக வருவோரும் 6 மாதங்களுக்கு மேல் முகாம்களுள் வாழாது இத்தகைய குடியிருப்புகளுக்கு மாறிவிடவேண்டும்.