தமிழ்நாட்டில் 115 முகாம்களில் பல ஆண்டுகளாக தங்க (அடைத்து) வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு உடனடி நிவாரண உதவிகளை அளிப்பதற்காக ரூ.12 கோடி ஒதுக்கியுள்ளதாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
webdunia photo
FILE
“தமிழ்நாட்டின் முகாம்களில் ஈழத் தமிழர்கள் தாங்கள் வாழ்வதற்குரிய அடிப்படை ஆதாரங்கள், வசதிகள் எதுவுமின்றி எத்துணை துன்பங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்” என்பதை புகைப்படங்களோடு ஒரு வார இதழ் வெளியிட்டதனால் அதனை அறிந்து கொண்ட தமிழக முதல்வர், உடனடியாக அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி, அவர்களுடையத் துயர் துடைக்க ரூ.12 கோடி ஒத்துக்கீடு செய்துள்ளார்!
அதுமட்டுமின்றி, ஈழ அகதிகள் முகாம்களைப் பார்வையிட்டு, அங்குள்ள குறைபாடுகள் குறித்து அறிக்கை தயார் செய்து இம்மாதம் 10ஆம் தேதிக்குள் அளிக்குமாறும் தனது அமைச்சர்களுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசும் முதல்வர் கருணாநிதியும் இப்போதாவது விழுத்துக் கொண்டு, ஈழ அகதிகளின் துயர் துடைக்க நடவடிக்கை எடுக்கிறார்களே என்று ஒரு பக்கம் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், சிங்களப் பேரினவாத அரசினால் துரத்தியடிக்கப்பட்டு இங்கு அகதிகளாக கால் நூற்றாண்டிற்கும் அதிகமாக அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இம்மக்களின் பெரும் குறை என்னவெனில், தங்களை சுதந்திரமாக நடமாட அரசு அனுமதிக்கவில்லை என்பதே.
சிறிலங்க இனவெறி அரசு தொடுத்த இனப் படுகொலைப் போரால் தங்கள் நாட்டை விட்டுக் கடலைக் கடந்த வந்த இம்மக்கள், ஓரிரு நாட்களில் கொண்டு வந்த அடைக்கப்பட்ட இந்த முகாம்களில், அடிப்படை வசதிகளும், உரிமைகளும் மறுக்கப்பட்டு, சட்டத்திற்கும், மனித உரிமைகளுக்கும் எதிராக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மையாகும்.
தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் தரும் சொற்ப நிவாரணத் தொகை தவிர, தங்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்துக் கொள்ளவற்காக ஒரு தொழிலை செய்வதற்கோ அல்லது வெளியில் சென்று உழைத்துப் பொருள் தேடவோ இம்மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
தாய்த் தமிழ்நாட்டில் இவர்களுக்கு அடிப்படை வசதிகளும் இல்லை, சுதந்திரமாக நடமாடும் உரிமையும் இல்லை. எங்கு செல்ல வேண்டுமென்றாலும் கட்டுப்பாடு, எதைச் செய்ய எத்தனித்தாலும் சந்தேகப் பார்வை, காவல் துறையின் மிரட்டல் என்ற நிலைதான் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.