இலங்கையில் வன்னி முகாம்களில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ள சற்றேறக்குறைய 3 இலட்சம் தமிழர்களில் ஒரு பகுதியினர் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மட்டும் ஒரே நாளில் 12,000 குடும்பங்களைச் சேர்ந்த 41,685 பேர் விடுவிக்கப்பட்டு, அவர்கள் வாழ்ந்து வந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்ற செய்தி அனைத்து நாளிதழ்களிலும் வந்துள்ளது.
FILE
இதனைச் சுட்டிக்காட்டி - எப்போதும் போல எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பதிலளித்து - அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் கருணாநிதி, முகாம்களில் உள்ள தமிழர்கள் விடுவிக்கப்படுவதில் இதற்கு மேலும் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.
ஈழத் தமிழர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குத்தான் மீண்டும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த, சிறிலங்க அமைச்சர் செந்தில் தொண்டைமான், முத்து சிவலிங்கம் ஆகியோர், “இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணியை அதிபர் ராஜபக்ச துரிதப்படுத்தியுள்ளார். இந்த டிசம்பருக்குள் அனைத்துத் தமிழர்களும் சொந்த இடங்களுக்குச் செல்வார்கள் என அதிபர் உறுதியளித்துள்ளார். தமிழர்கள் குடியமர்த்தப்படுவதில் யாருக்கும் சந்தேகம் இருந்தால் நேரில் வந்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்” என்று அவர்கள் கூறியதை மேற்கோள் காட்டியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
இவ்வாறு கூறியது மட்டுமின்றி, “அவர்களுடைய கருத்துகளை படித்துப் பார்த்த பிறகாவது, ஐயப்பாடுள்ள அறிக்கை வெளியிட்டவர்களும், ஒரு சில பத்திரிக்கையாளர்களும் இலங்கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் படிப்பட்டியாக அவரவர் தம் வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதைப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
இதெல்லாம் யாரால், எதனால் நடக்கிறது?
தமிழக முதல்வர் எடுத்த முயற்சியின் காரணமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆளும் கட்சிக் கூட்டணியில் இடம்பெற்ற 10 உறுப்பினர்கள் இலங்கை சென்று முகாம்களை பார்வையிட்டப் பிறகு, சிறிலங்க அதிபர் ராஜபக்சவை சந்தித்து விடுத்த வேண்டுகோளை ஏற்று, முகாம்களில் உள்ளத் தமிழர்களை அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க அதிபர் ராஜபக்ச ஒப்புக்கொண்டது போல ஒரு தோற்றம் தமிழ்நாட்டில் உருவாக்கப்படுகிறது.
“முகாமிலிருந்து யாராலும் விடுவிக்க முடியாத தமிழர்களை 5 நாட்களில் விடுவித்த கலைஞர் வாழ்க” என்று திமுக-வின் சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன!
‘வன்னி முகாமில் இருந்து ஒருவரைக் கூட விடுவிக்க ஒப்புக் கொள்ளாத ராஜபக்ச, தமிழ்நாட்டிலிருந்து சென்ற நாடாளுமன்றக் குழு விடுத்த வேண்டுகோளை ஏற்று விடுவிக்கத் தொடங்கியதாக’ ஒரு மாயை ஒத்துப் போகும் ஊடகங்களின் துணையுடன் இங்கு நடந்து கொண்டிருக்கிறது.
FILE
சட்டத்திற்குப் புறம்பாக, அடிப்படை வசதிகள் இன்றி, மோசமான சூழலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுவிக்கப்பட வேண்டும், அதுவும் வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்குள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது இங்குள்ளத் தமிழர்கள், மனித உரிமை அமைப்புகள், அரசியல் கட்சிகள், தேர்தல் நாடா அரசியல் அமைப்புகள் ஆகியவற்றிலிருந்து ஐ.நா. அகதிகள் ஆணையம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகள் என்று அனைவருமே சிறிலங்க அதிபரை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அம்னஸ்டி இண்டர்நேஷனல் என்றழைக்கப்படும் பன்னாட்டு பொது மன்னிப்பு அமைப்பு கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதிமுதல் ‘முகாம்களை திறந்துவிடு’ என்ற கோரிக்கையுடன் ஒரு இயக்கமே நடத்தி வருகிறது. அப்போதெல்லாம் தமிழக அரசும், அதன் தலைமையும் மற்ற அரசியல்களில் பிஸியாக இருந்ததால் அவர்கள் இதையெல்லாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.