2) செல்வாவின் போராட்டத்தையே ஒடுக்கியதால்தானே பின்னாளில் ஆயுத போராட்டம் உருவானது? அதனால் சிங்களர்களுக்கு ஏற்பட்ட கோபம்தானே 1983இல் வெடித்த இனப் படுகொலை? குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை கொல்லப்பட்டது சிங்களர்கள் கோபமுற்றதால்தானே? அவர்களிடம் ஏன் இந்த ஆலோசனையை அன்றே சொல்லவில்லை? 3) கால் நூற்றாண்டிற்கும் மேலாக நடந்த ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தது மட்டுமின்றி, உங்களது பிறந்த நாளில் வசூலான பணத்தை எல்லா ஆயுதமேந்திய இயக்க்களுக்கும் தலா ரூ.50,000 வீதம் பிரித்துக் கொடுத்தீரே, அது எதற்காக? கச்சத் தீவிற்கும் இது பொருந்துமா?இதற்கெல்லாம் உங்களிடம் பதில் இருக்காது என்பது தெரியும். ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு, எதிர்க்கட்சியானால் வேறு பேச்சு என்பது உங்களை அறிந்த தொண்டர்களுக்கே தெரியும்.ஆயினும் நமது மற்றொரு கேள்வி இதுதான்:கச்சத்தீவை மீட்க அரசியல் வேறுபாடுகளை மறந்து நாம் எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கூறினீர்களே? இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை நாம் மீண்டும் கேட்டால் சிங்களவர்களுக்கு கோபம் வராதா? அங்கே சென்று மீன் பிடித்தாலே சுடுகிறானே சிங்களவன்? அந்தத் தீவை திருப்பிக் கொடடா என்று கேட்டால் அவனுக்கு எவ்வளவு கோபம் வரும்? அதனால் நமது மீனவர்கள் பாதிக்கப்படுவார்களே? என்ன செய்வீர்கள்? நமது ‘மீனவர்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க’ கச்சத் தீவும் வேண்டாம், அந்த கடற்பரப்பில் நாம் சென்று மீன் பிடிக்கவும் வேண்டாம் என்று கூறுவீர்களா முதல்வர் அவர்களே? இதேபோல முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையிலும் கேரள அரசிற்கும், அதன் தலைவர்களுக்கும் அடிக்கடி கோபம் வருகிறதே, அந்த அணையை இடித்துவிட ஒப்புக் கொள்வீர்களா? பாலாற்றுப் பிரச்சனையிலும் உங்களின் அரசு இந்தப் புதிய பாதையில்தான் சென்றுதான் ‘தீர்வு’ காணுமா? ஆனால் அங்கே தமிழர்களுக்கு மாநில சுயாட்சியாவை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிற நீங்கள், அதே கோரிக்கையை சமீபத்தில் எழுப்பினீர்கள், அது சோனியாவை கோபப்படுத்தினால் விட்டுவிடுவீர்களா? இதெற்கெல்லாம் நீங்கள் பதில் கூறவேண்டும். அப்போதுதான் உங்களிடம் எதை எதிர்ப்பார்க்கலாம் என்பது தமிழக மக்களுக்குப் புரியும். பெரியார் காட்டிய வழியா இது? ஆட்சியும், அதிகாரமும், பதவியும் ஒரு மனிதனை மாற்றும் என்று கூறுவார்கள். ஆனால் அது ஒரு தலைவனை இந்த ‘அளவிற்கு’ மாற்றும் என்று இன்றுதான் தெரிகிறது. சுயமரியாதை இயக்கம் கண்ட பெரியார், தமிழரின் உரிமைக்காக சமூக, அரசியல் தளங்களில் கடுமையாக போராடினார். அதன் விளைவாகவே இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் முதல் முறையாக திருத்தப்பட்டு, இட ஒதுக்கீட்டுற்கு வழிகாணப்பட்டது. தமிழரின் மொழிக்கு உரிய இடம் கிடைத்தது. மானமும், அறிவும் மாந்தரின் அடையாளம் என்றார் பெரியார். அப்படியே நின்றார், போராடினார், வெற்றியும் பெற்றார். ஆனால் அவர் வழி வந்த அரசியல் தலைவர்கள் அனைவரும் - விதிவிலக்கில்லாமல் அனைவரும் - பெரியார் ஊட்டிய அறிவையும், தமிழரின் மானத்தையும் அடக்கு வைத்துவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனை சிங்களவன் நன்கு உணர்ந்துள்ளான். அதனால்தான் கூறினான் “தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் கோமாளிகள்” என்று. |