ஒரு பிரச்சனை குறித்து ‘பேசாமல் இருந்தாலே அது செத்துவிடும்’ என்பதை அறியாதவரா அனுபவம் மிக்க நமது அரசியல் தலைவர்? அதனால்தான் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அந்த மாபெரும் படுகொலை குறித்து வற்புறுத்தி வரும் நிலையிலும் இன்றுவரை கருணாநிதி அப்படி ஒன்று நடந்ததாகவே காட்டிக் கொள்ளாமல் மெளனம் சாதிக்கிறார் என்றால் எப்படிப்பட்ட அரசியல் சாதுரியம்?உறுப்பினர்களின் பேச்சும் முதல்வர் அளித்த பதிலும்! “ஆடு மாடுகளைக் கூட வேலி போட்டு அடைத்து வைப்பதில்லை, ஆனால் அங்கே மனிதர்களை முள்வேலி போட்டு அடைத்து வைத்திருக்கிறார்கள். பக்கத்தில் இருந்தும் உதவி செய்ய முடியாதவர்களாக கைகள் கட்டப்பட்டுள்ளோம்” என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர் செல்வம் பேசுகிறார். “போர் முடிந்த பின்னும் எஞ்சியுள்ள தமிழர்கள் படும் சிரமங்களை பார்க்கும் போது கண்கள் குளமாகின்றன. மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கட்டாந்தரையில் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கின்றனர். தமிழர்களுக்கு சம உரிமையும், வாழ்வையும் பெற்றுத் தரவேண்டும், அவர்கள் எங்கு வாழ்ந்தார்களோ அதே இடங்களில் மீண்டும் குடியமர்த்த வேண்டு்ம். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்களர்களை குடியமர்த்தக் கூடாது” என்று காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை கொறடா பீட்டர் அல்போன்ஸ் பேசுகிறார்.“முகாம்களில் உள்ள இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்படுகின்றனர். இளம் பெண்களை கடத்திச் சென்று கற்பழிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இன்றுள்ள நிலையில் குறைந்த பட்ச சுயாட்சி உரிமையை பெற்றுத் தர வேண்டும்” என்று பா.ம.க. சட்டப் பேரவைக் கட்சித் தலைவர் கோ.க. மணி பேசிகிறார்.“உயிரோடு மிச்சமிருக்கும் தமிழர்களையாவது பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீதமிருக்கின்ற தமிழர்களாவது மானத்தோடு வாழ வேண்டும். பாதிக்கப்பட்டுக் கிடக்கும் அவர்களுக்கு உரிய நிவாரணம் சென்று சேர வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் இராமசாமி பேசுகிறார்.இந்த கேள்விகளுக்கெல்லாம் நேரடியான எந்தப் பதிலும் தெரிவிக்காமல், “அங்குள்ள தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை சிங்கள அரசுதான் செய்ய முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அரசு இது குறித்து வற்புறுத்தத்தான் முடியும்” என்று முதல்வர் பதில் கூறுகிறார். தமிழ் நாட்டின் முதலமைச்சரின் பதிலை ஏதோ இவர் அடிப்படை இன்றி அளித்த பதிலாக புரிந்துகொண்டால் ஏமாந்து விடுவோம். இந்த தலைவர் பயன்படுத்திய இதே வார்த்தையைத்தான், அயலுறவுச் செயலரான சிவ்சங்கர் மேனன் கொழும்புவிலும், பிறகு டெல்லியிலும் கூறினார். “என்ன செய்ய வேண்டும் என்பதை சிறிலங்க அரசிற்கு நாங்கள் எதையும் சொல்லப் போவதில்லை. அவர்களின் நாடு, அதைச் செய், இதைச் செய் என்று நாங்கள் எதையும் அவர்களிடம் கூறிட முடியாது” என்று கூறினார். இதைத்தான் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் பங்கு பெற்றிருக்கும் திமுக-வின் தலைவரான கருணாநிதி தமிழக சட்டப் பேரவயையில் பதிலாக கூறியுள்ளார்! நாம் எதையாவது பேசி சிங்களவர்களின் கோபத்தை கிளிறிவிடக் கூடாது என்றும் ஆலோசனை கூறியுள்ளார் தமிழக முதல்வர்!“இங்கு நாம் வீரவேசமாகப் பேசலாம், சூறாவளிப் பேச்சு, புயல் வேகப் பேச்சு என்று பேசி அதற்காக புகழாரம் சூட்டலாம். தமிழ் மக்களைக் காப்பாற்ற அது உதவாது, மாறாக சிங்களர்களின் கோபத்தைத்தான் அது அதிகரிக்கும்” என்று தமிழினத் தலைவர் என்று அழைக்கப்படும் திராவிட இயக்கத்தின் அரசியல் கட்சியின் தலைவராக உள்ள கருணாநிதி ஆலோசனை கூறியுள்ளார்.திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், பெரியார், அண்ணா வழியில் இயக்கத்தையும், அரசியலையும் நடத்திய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கலைஞர் மு. கருணாநிதியிடம் நாம் முன்வைக்கும் கேள்விகள் இதுதான்:1) தமிழர்கள் தங்களுக்கு அரசமைப்பு ரீதியாக சம உரிமை கோரி சாத்வீக வழியில்தானே போராட்டத்தை துவக்கினார்கள்? அதற்கே சிங்களவனுக்கு கோபம் வந்ததே? அதனால்தானே ஈழத் தந்தை செல்வாவையும், அவருடன் நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்த மற்ற தலைவர்களையும் சிங்கள காவல் துறையும், சிங்கள காடையர்களும் அடித்து உதைத்தனர்? அப்படியானால், அவர்களுக்கு கோபம் வரும் வகையில் போராடியது செல்வா செய்த தவறா? |