இலங்கையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் வாடும் ஈழத் தமிழரின் நிலை குறித்தும், அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கச் செய்வது குறித்தும், அவர்களின் அரசியல் உரிமை குறித்தும் விவாதிக்க தமிழக சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு முதலமைச்சர் கருணாநிதி அளித்துள்ள ‘விரிவான’ பதில் தமிழனின் அரசியல் தலைமை எந்த அளவிற்கு தடம் மாறிப் போய்விட்டது என்பதற்குச் சான்றாகும்.ஈழத் தமிழரின் பிரச்சனை (தான் ஆட்சியில் இருக்கும் போது) அரசியல் பிரச்சனை ஆவதையோ அல்லது தேர்தல் பிரச்சனை ஆவதையோ திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி விரும்புவதில்லை என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிந்து உண்மையாகும்.அதனால்தான் இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்கியதும், இலங்கையில் இறுதிக் கட்டப் போரில் அப்பாவித் தமிழர்கள் 50 ஆயிரத்திற்கு மேல் கொல்லப்பட்டவர்கள் குறித்து கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சியான அஇஅதிமுக-வும், மதிமுக-வும் ஒத்திவைப்புத் தீர்மானம் கொ்ண்டுவந்தபோது அதனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் வெளிநடப்பிற்கு வழி செய்தது ஆளும் கட்சி!மறுநாள் அவர்கள் அப்பிரச்சனையை அவையில் பேசியபோதும், அதனைப் பெரிது படுத்தாமல் பதிலளித்து நீர்க்கச் செய்தது ஆளும் கட்சி. ஏனென்றால், இந்தியாவின் நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட 16ஆம் தேதி மதியம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் பலம் பெற்றதற்குப் பிறகே ஈழத்தில் தமிழர்கள் மீதான தாக்குதல் கடுமையானது. நான்கு பக்கமும் சிறிலங்க இராணுவத்தின் பல படையணிகள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி. 2 கி.மீ. சுற்றளவு உள்ள பகுதியில் முடங்கியிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவிக்கத் தொடங்கினர்.அத்தாக்குதலின் உச்சக் கட்டமாக, மே 18ஆம் தேதி (திங்கட் கிழமை) பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய இரண்டு கிராமங்களில் இருந்த பல பத்தாயிரக்கணக்கான மக்கள் அனைவரையும் கொன்று தீர்த்தது சிறிலங்க இராணுவம். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் படுகொலையை நடத்தி முடித்த பிறகே போர் முடிந்தது என்று இராணுவம் அறிவித்தது. மறுநாள் போர் முடிந்ததை சிறிலங்க அதிபர் ராஜபக்ச அறிவித்தார். இறுதி கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட விவரம் அறிந்த உலக நாடுகள் சிறிலங்க அரசைக் கண்டித்தன. “மக்கள் வாழ்ந்த தடமே அங்கு இல்லை, அந்த இடமே அச்சமூட்டுவதாக இருந்தது” என்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட ஐ.நா. பொதுச் செயலரின் முதன்மை அலுவலர் விஜய் நம்பியாரும், பிறகு பொதுச் செயலர் பான் கீ மூனும் கூறினர். அது குறித்து சர்வதேச குழுவை அனுப்பி விசாரிக்க வேண்டும் என்று பான் கீ மூனும், மற்ற உலக நாடுகளும் ராஜபக்சேவை வற்புறுத்தின.ஆனால், தாய் தமிழகத்தின் முதல்வராக இருக்கும் மு.கருணாநிதி இது குறித்து சற்றும் ‘அறியாதவராய்’ டெல்லியில் முகாமடித்து தனது கட்சிக்கு (குடும்பத்திற்கு) மத்திய அமைச்சர் பதவிகளை பெறுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தார். பல பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து, அந்தத் தொப்புள் கொடி உறவுகள் ஆறே முக்கால் கோடிப் பேர் வாழும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கவலைப்படாதவராகவே இருந்தார். அது குறித்து இன்று வரை அவர் பேசவில்லை! |