தமிழர்களின் அரசியல் ரீதியான நியாயமான சம உரிமையை மறுக்கும் ஒரு சட்ட ஏற்பாடே சிறிலங்க அரசமைப்பின் 13வது திருத்தம் என்று விடுதலை இராசேந்திரன் கூறினார்.
சென்னை லயோலா கல்லூரியில் தமிழர்களைக் காப்போம் (Save Tamils) எனும் தகவல் தொழில்நுட்ப நெறிஞர்களின் அமைப்பு, ‘இலங்கையில் தமிழர்களின் தற்போதைய நிலை’ என்ற தலைப்பில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு அரசியல் தீர்வு குறித்து உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலர் விடுதலை க. இராசேந்திரன், 13வது அரசமைப்புத் திருத்தம் ஈழத் தமிழர்களை ஒரு தனித்த தேசிய இனமாகவோ அல்லது அந்நாட்டில் இரண்டு வெவ்வேறு தேசிய இனங்கள் உள்ளதென்பதையோ அங்கீகரிக்கவில்லை என்று கூறினார்.
இலங்கையின் ஒற்றையாட்சியை உறுதிப்படுத்தும் இந்த திருத்தத்தினால் அமைக்கப்படும் மாகாண சபைகளில் இடம் பெறும் அமைச்சர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், எல்லா அதிகாரமும் அந்நாட்டு அதிபரால் நியமனம் செய்யப்படும் ஆளுநருக்கே உள்ளது என்று கூறினார்.
13வது திருத்தத்தின் மூலம் செய்யப்படும் அதிகாரப் பகிர்வு என்பது அதிகாரமற்ற நிர்வாக அதிகாரமே அளிக்கக்கூடியது என்றும் காவல்துறை கூட முழுமையாக மத்திய அதிகாரத்தின் கீழ்தான் இருக்கும் என்று கூறிய இராசேந்திரன், மாகாணங்களுக்கு உட்பட்ட நிலங்களின் மீதான அதிகாரம் கூட சிறிலங்க அதிபரின் ஆளுமைக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்று கூறினார்.
நாடுகடந்த தமிழ் ஈழ தேசிய அரசு எனும் புதிய கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவது குறித்து விடுதலைப் புலிகள் ஆலோசித்து வருவதாகவும், அது புதியதோரு அரசியல் தீர்விற்கு வழி வகுக்கக் கூடியது என்றும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் மையத்தின் இயக்குனர் அருட் தந்தை ஜெகத் கஸ்பர், இலங்கையில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாக இருந்த சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளையும் தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றங்களுக்கும், இனப் படுகொலைக்கும் பொறுப்பாக்க வேண்டும் என்று கூறினார்.
ஈழத் தமிழர்களின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சீனாவில் இருந்து தருவிக்கப்பட்ட பல அபாயகரமான ஆயுதங்கள் சோதிக்கப்பட்டுள்ளன என்று கூறிய அருட் தந்தை கஸ்பர், ஈழ விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சிகளின் நேர்மையற்ற அரசியலும் ஒரு காரணம் என்று கூறினார்.
இறையாண்மை என்ற சொல்லை மிகத் தவறாக அரசியல் அரங்கில் பேசவும், பயன்படுத்தவும் செய்கின்றனர் என்று கூறிய சென்னை பல்கலையின் அரசியல் துறையின் பேராசிரியர் மணிவண்ணன், ஈழத் தமிழர்களின் இறையாண்மை மீட்புப் போராட்டமே அவர்களின் விடுதலைப் போராட்டம் என்று கூறினார்.
ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்க அரசு இனப் படுகொலை, மானுடத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றை இழைத்துள்ளது என்று கூறிய மக்கள் சமூக உரிமை கழகத்தின் வழக்கறிஞர் அருள், இதற்காக சிறிலங்க அரசு தண்டிக்கப்பட்டாக வேண்டும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியின் போது கீரா இயக்கிய ஒரு குறும்படம் திரையிடப்பட்டது. சிறிலங்க இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்ட ஒரு இளம் பெண் எந்த அளவிற்கு மன நிலை பாதிக்கப்பட்டவரானார் என்பதை அத்திரைப்படம் விளக்கியது.
ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய போராட்டம் என்பது அதற்கான 5 பண்புகளையும் கொண்டுள்ளதை விளக்கி சட்ட அறிஞர் கரன் பார்க்கர் விளக்கிய காட்சியும் திரையிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பல நூற்றுக்கணக்கான இளைஞர்களும், பெண்களும், சான்றோர்களும் கலந்து கொண்டனர்.
ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலையை கண்டித்து கடந்த 7ஆம் தேதி ‘அநீதிக்கு எதிரான பேரணி’யை இந்த அமைப்பு நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. |