கொழும்பு நகரில் சிறிலங்க நாடாளுமன்றத்திற்கு முன்னால் சம உரிமை கேட்டு சாத்வீக வழியில் போராடிய தமிழர் தலைவர் செல்வநாயகம் உள்ளிட்டோர் மீது சிறிலங்க காவலர்களும், காடையர்களும் தாக்குதல் நடத்தவில்லையா? அமைதியாக கூடி தமிழ் மாநாடு நடத்திய மக்கள் மீது காவல் துறையினரே வன்முறை செய்து 9 பேரைக் கொல்லவில்லையா? இதையெல்லாம் பார்த்தப் பிறகுதானே உருவானது ஆயுதப் போராட்டம்? சும்மாவா சுட்டார்கள் ஆல்பிரட் துரையப்பாவை? இந்த வரலாற்றையெல்லாம் கவனமாக மறைத்துவிட்டு (மூன்றாண்டுக் காலம் கொழும்புவில் பணியாற்றியவருக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்), தனது நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக எழுந்த பிரிவினைப் போராட்டத்தை ஒடுக்க அந்நாட்டு அரசிற்கு சட்டப்பூர்வமான சுய காப்பு உரிமை உள்ளது என்று கூறுகிறார் ஜார்ஜ் ஹீன்! தனது எழுத்தோவியத்தை முடிக்கும் போது தமிழர்களின் சட்டப்பூர்வமான குறைகளை நிறைவேற்ற சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என்றும் கூறுகிறார்! என்னே முரண்பாடு! Legitimate Grievances of the minority Tamils என்பதை ஒப்புக் கொள்ளும் இந்த ராஜ தந்திரி, அது என்ன? எவ்வாறு உருவானது? அதற்கான தோற்றவாய் எது? உருவான காலம் எது? எப்படி பெரிதானது? அது ஆயுதப் போராட்டமாக உருவெடுக்கக் காரணம் என்ன? என்பதை நியாயமாக ஆராய்ந்திருப்பாரெனில் யார் பயங்கரவாதி என்பதும், அரச பயங்கரவாதம் எது என்பதும் தெளிவாகியிருக்கும் இவர் எழுத்தை படிப்பவர்க்கு.தங்களை தனது முழு சக்தியையும் கொண்டு ஒடுக்கும் வலிமை வாய்ந்த எதிரியை வீழத்த ஆயுத வலிமையை ஏற்பதும், தங்கள் இன்னுயிரை ஈந்து தம்மக்களை அப்படிப்பட்ட கொடுமையிலிருந்தும் காப்பதுதான் தற்கொலைத் தாக்குதல். கொடுமையான எதிரியை ஒழித்துவிட்டு, அவனின் படையிடம் சிக்காமல் தங்களையே அழித்துக் கொள்வதும், தங்களையே கருவியாக்கி, தமது இனத்தை அழிக்கும் எதிரிகளை அழிப்பதும் நாகரீக மானுடத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட போராட்ட வழிமுறைகள்தான். இது தவறென்றால் நாம் வாஞ்சிநாதனையும், உத்தம் சிங்கையும் கொண்டாட முடியாது. பகத் சிங்கை நமது நாட்டின் பெருமையாக கருதி சிறப்பு தபால் தலையையும் வெளியிட முடியாது. ஒரு இனத்தின் மீட்சிக்காக தங்களையே தியாகம் செய்வோரை எப்படி அழைப்பது என்பது அந்த இனத்தின் உரிமை. அதே நேரத்தில் அரச பயங்கரவாதத்தை சகித்துக் கொண்டு, ஏதோ ஒரு அரசியல் தீர்வை ஏற்றுக் கொண்டு, அமைதி காத்து வாழ் என்று கூறுவதற்கு உலகிற்கு உரிமை கிடையாது. ஈழத் தமிழினத்தின் போராட்டத்திற்கான அடிப்படையை விளங்கிக் கொள்ள வேண்டும், அதன் மீது தீர்வை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் தங்களுடைய போராட்டத்திற்கான தீர்வு எது என்பதை இறுதியாக தீர்மானிக்கும் பொறுப்பு அந்த மக்களுக்கு மட்டுமே உரியது. இதனை உணர்ந்து கொண்டவர்கள் மனிதாபிமானிகள் - அவர்கள் ராஜ தந்திரிகளாக இருந்தாலும் - சிறிலங்க அரசு நடத்தி முடித்த போரில் பல பத்தாயிரக்கணக்கில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் உயிர்களுக்காக அந்நாட்டு அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறுவார்கள். தங்களுடைய ராஜ விசுவாசத்தைக் காட்ட விரும்புவோர் எழுதினால் மட்டுமே உண்மையையும், நியாயத்தையும் மறைத்து ராஜ தந்திர நியாயம் கற்பிக்க முடியும். |