எந்தப் பிரச்சனைக்கு வருகிறார் என்றால், இறுதி கட்ட இனப் படுகொலை நடந்ததா இல்லையா என்பது பற்றியல்ல, மாறாக எப்படிப்பட்டது விடுதலைப் புலிகள் இயக்கம் என்பதை விவரிக்கத் துவங்குகிறார். சிறிலங்க அரசு திட்டமிட்டு, தெற்காசிய நாடுகளின் உதவியுடன் நடத்தி முடித்த இனப் படுகொலையை மறைக்க முற்படும் ஜார்ஜ் ஹீன், உண்மையில் இப்படிப்பட்ட ‘உள்நாட்டுப் போருக்கு’ காரணமான இனப் பிரச்சனையை விவரமாக விளக்கிவிட்டு, அதற்கு அரசியல் ரீதியான தீர்வு காண சிறிலங்க அரசு ‘எடுத்த’ முயற்சிகளையெல்லாம் பட்டியலிட்டுவிட்டு, பிறகு அதிபர் ராஜபக்ச மேற்கொண்ட இராணுவ ரீதியிலான தீர்வுத் திட்டத்தை ஆதரித்து எழுதியிருப்பாரேயானால், அங்கு பணியாற்றிய ராஜ தந்திரியின் கருத்தாக அதனை கருதியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல், ராஜபக்ச அரசு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்கு உதவிய இந்தியா, சீனா, பாகிஸ்தான், இரஷ்யா ஆகிய நாடுகள் என்ன காரணத்தை கூறினவோ அதனையே இவரும் கூறி - பயங்கரவாதத்திற்கு எதிரான போர் - தமிழர்களுக்கு எதிரான போரை நியாயப்படுத்துகிறார்! ஏனெனில் அங்கு விடுதலைக்காக போராடியவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரையிட்டால்தான், அவர்களுக்கு ஆதரவளித்த மக்களையும் ஒட்டுமொத்தமாக துடைத்தொழிப்பதற்கு நியாயம் கற்பிக்க முடியும். இந்த வித்தையை ராஜபக்ச அரசு - குறிப்பாக அந்நாட்டு அரசின் பாதுகாப்புச் செயலர் கோத்பய ராஜபக்ச கையாண்டுள்ளார். அதனால்தான், பாதுகாப்பு வலயத்திலிருந்த மருத்துவமனையை இராணுவ இலக்குதான் (legitimate military target) என்று கூறி அதன் மீது சிறிலங்க இராணுவம் குண்டு வீசியதை நியாயப்படுத்தினார்! எனவே போரில் பாதிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்லது அவர்களுக்கு துணை போனவர்கள் என்று கூறிவிட்டால், அதன்பிறகு ‘உள்நாட்டுப் போரில்’ கொல்லப்பட்டவர்களைப் பற்றி எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாது அல்லவா? அப்படித்தானே இராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலும் அமெரிக்காவும் அதன் நேச நாட்டுப் படைகளும் செய்தன! இல்லாவிட்டால் ஈராக்கில் மட்டும் 11,50,000 பேர் கொல்லப்பட்டதற்கு என்ன நியாயம் கூற முடியும்? எனவே அந்த ‘சட்டபூர்வமான’ வழிமுறையை கொண்டு பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதை மறைக்க முயன்றுள்ளார் ஜார்ஜ் ஹீன். நல்ல ராஜ தந்திரி. கால் நூற்றாண்டிற்கு மேலாக அங்கு நிலவிவருவது அந்நாட்டின் பூர்வீகக் குடிகளின் சம உரிமைப் போராட்டத்தின் அடுத்தக் கட்ட வளர்ச்சியான விடுதலைப் போராட்டம் என்பதையும், அதற்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பதற்கு அடுத்தடுத்து வந்த சிறிலங்க அரசுகள் தவறிவிட்டன என்பதையும் மிகச் சாதுர்யமாக மறைத்துள்ளார் ஜார்ஜ் ஹீன்.தீர்வுத் திட்டத்தை தூக்கி எறிந்த சிறிலங்கா2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை சிலி நாட்டின் தூதராக ஜார்ஜ் ஹீன் கொழும்புவில் பணியாற்றியுள்ளார்.இந்த காலகட்டத்தி்ல்தான் இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் பேச்சுவார்த்தைகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், சிறிலங்க அரசிற்கும் இடையே நார்வேயின் அனுசரணையுடன் நடந்துவந்து, அதன் உச்சக் கட்டமாக நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்கு வகை செய்யும் நோக்கில் இடைக்கால சுய நிர்வாக அதிகார அமைப்பை (Interim Self Governing Authority _ ISGA) நிறுவுவதற்கான திட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்க அரசிற்கு அளிக்கிறார்கள். தாங்கள் அளித்த தீர்வுத் திட்டத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று புலிகள் வற்புறுத்தவில்லை. மாறாக, இதனை ஒரு அடிப்படையாக்கி இறுதியான அரசியல் தீர்வை உருவாக்க பேச்சுவார்த்தையின் மூலம் முயற்சிப்போம் என்று அறிக்கையும் விடுகிறார்கள். இலங்கைத் தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண தயார் என்று கூறிவந்த சிறிலங்க அரசு, இத்தீர்வு திட்டத்தை ஆராய்ந்து பார்க்கிறோம் என்று கூட சொல்லாமல் கிடப்பில் போட்டது. அமைதிக்கான முன்னெடுப்புகளை ஓரளவிற்கு மேற்கொண்டு வந்த, அப்போது பிரதமராக இருந்த ரனில் விக்கிரசிங்கே அரசின் அதிகாரத்தை பறித்தார் அதிபராக இருந்த சந்திரிகா. இவர் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக அமைதித் தீர்வு காண்பேன் என்று கூறி (1995இல்) தமிழர்களின் பேராதரவுடன் ஆட்சிக்கு வந்தவர். இரண்டு முறை அதிபராக இருந்தார், அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதை விட, அதற்குத் தயாராக இருந்த விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பதற்கான முயற்சிகளை சர்வதேச ரீதியில் மேற்கொண்டார். அதற்குத்தான் இவருக்கு ‘தமிழரான’ லக்ஷ்மண் கதிர்காமர் பெரிதும் உதவினார். |