கேரள மாநிலத்தின் முதல்வராக இருந்தவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கே. கருணாகரன் தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கும் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக் காலம் முடியும் தருவாயில் உள்ளது மட்டுமின்றி, அவருக்கு உடல் நலக் குறைவும் ஏற்பட்டுள்ளதால் விரைவில் அவர் விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக புதிய ஆளுநர் நியமிக்கப்படும் நிலை உள்ளது. அவருடைய இடத்தில் நியமனம் செய்யப்படப் போகிறவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்பொழுது டெல்லி சென்றுள்ள கருணாகரன் இன்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின்போது அவரை எந்த மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்வது என்பது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.91 வயதாகும் கருணாகரனை கேரள அரசியலில் இருந்து ஒய்வளிக்க அவருக்கு கெளரவமான ஒரு பதவியை அளிக்கும் முகமாக தென் மாநிலம் ஒன்றின் ஆளுநராக அவரை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்ததுள்ளது. குருவாயூரப்பனின் தீவிர பக்தரான கருணாகரன் ஒவ்வொரு மாதம் முதல் தேதியன்றும் தவறாமல் குருவாயூர் சென்று கிருஷ்ணனை வழிபடும் வழக்கம் கொண்டவர். எனவே அதற்கு வசதியாக கர்நாடகம் அல்லது தமிழ்நாட்டின் ஆளுநராக நியமனம் செய்ய காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. தனது குருவாயூர் பயணத்திற்குத் தோதாக இருப்பது தமிழ்நாடு என்பதால், தமிழ்நாட்டின் ஆளுநராக தன்னை நியமனம் செய்யுமாறு சோனியாவிடம் கருணாகரன் கேட்டுக் கொள்வார் என்று கேரள அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழ்நாட்டின் ஆளுநராக கருணாகரனை நியமிக்கும் பட்சத்தில் அதுகுறித்து தமிழக முதல்வருடன் சோனியா விவாதிப்பார் என்பது மட்டுமின்றி, அதுகுறித்து பிரதமரின் கருத்தையும் அறிந்துகொண்ட பின்னரே முடிவு செய்வார் என்றும் கூறப்படுகிறது.கருணாகரனைப் போன்று அரசியலில் பழுத்த அனுபவம் கொண்ட தமிழக முதல்வர் கருணாநிதி இதனை எப்படி அணுகுவார் என்பதும் சிந்திக்கத் தக்கதாகும். தமிழ்நாட்டிற்கும், கேரளத்திற்கும் முல்லைப் பெரியார் அணைப் பிரச்சனையில் இருந்து பல்வேறு பிரச்சனைகளில் எவ்வித முன்னேற்றமும் இன்றி ஒரு இணக்கமற்ற சூழல் நிலவுவதால், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரை தமிழ்நாட்டின் ஆளுநராக ஏற்பது எப்படிப்பட்ட எண்ண அலைகளை தமிழ்நாட்டில் ஏற்படுத்தும் என்பதையும் முதல்வர் கருணாநிதி சீர்தூக்கிப் பார்ப்பார் என்று எதிர்பார்க்கலாம். கேரளத்தின் முன்னாள் முதல்வர் என்பது மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குமிக்க தலைவராக திகழ்ந்த கருணாகரன் தமிழ்நாட்டின் ஆளுநராக இருப்பது இரு மாநில விவகாரங்களில் ஒரு சாதகமான தன்மையை உருவாக்கும் என்று கருதுவாரானால் அவரை ஆளுநராக ஏற்பதற்கு கருணாநிதி நிச்சயம் சம்மதிப்பார் என்றே எதிர்பார்க்கலாம். ஆளுநர் பதவி என்பது அதிகாரமிக்க பதவியாக அரசமைப்பு ரீதியாக இருந்தாலும், அவருடைய முடிவுகள் பொதுவாக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்றுக் கொள்வதாகத்தான் இருந்திருக்கிறது. அதே நேரத்தில், தமிழ்நாட்டில் இன்றுள்ள அரசியல் நிலையில், தமிழ்நாட்டின் ஆளும் கட்சி பெரும்பான்மையற்ற ஒரு அரசாகவும், அது காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் இருக்கும் ஆட்சியாக இருப்பதாலும் (ஏற்கனவே தமிழ்நாட்டின் காங்கிரஸ்காரர்கள் ஆட்சிக் கனவில் இருப்பதால்), தன்னை ஒத்த ஒரு அரசியல் சித்தரான கருணாகரனை இங்கு கொண்டு வருவது தேவையற்ற சிக்கலை வெற்றிலை பாக்கு வைத்து வரவழைப்போல ஆகிவிடுமோ என்றும் தமிழக முதல்வர் கருதுவதற்கும் வாய்ப்புள்ளது.என்ன நடக்கப்போகிறது என்பது இன்று மாலை தெரிந்துவிடும். |