இலங்கையில் பாதுகாப்பு வலயத்திற்குள் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி அப்பாவித் தமிழர்களைக் கொன்றதற்காக போர் குற்றம் சாற்றப்படும் சிறிலங்க அரசை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிற்கு மக்கள் சமூக உரிமைக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று கூறி, வன்னிப் பகுதியில் அப்பாவி மக்களைக் கொன்று அப்பட்டமான மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சிறிலங்க அரசு மீது போர் குற்றம் புரிந்துள்ளதாகவும், மானுடத்திற்கு எதிரான குற்றமிழைத்துள்ளதாகவும் கூறி, அது குறித்து விவாதிக்க ஜெர்மனியும் மேலும் 16 நாடுகளும் விடுத்த கோரிக்கையை அடுத்து ஐ.நா.வின் மனித உரிமை பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று ஜெனிவாவில் கூடுகிறது.
இந்தக் கூட்டத்தில் சிறிலங்க அரசிற்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதைத் தடுக்க, சிறிலங்க அரசு சுயமாக ஒரு தீர்மானத்தை உருவாக்கி அதனை பேரவை உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்ற முயற்சித்து வருகிறது. இந்தத் தீர்மானத்திற்கு சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியா உட்பட 12 நாடுகள் ஆமோதித்துள்ளன. மேலும் பல நாடுகளின் ஆதரவைப் பெறவும் இந்தியா முயற்சிப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.
“நடந்து முடிந்த போரில் அப்பாவி மக்களை மீட்டதாகவும், உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த அந்த மக்களின் மனிதாபிமான தேவைகளை நன்கு நிறைவேற்றி வருவதாகவும் தன்னை பெருமைபடுத்திக் கொண்டு சிறிலங்க அரசு கொண்டுவரும் அந்த தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும்” என்று கோரியுள்ள மக்கள் சமூக உரிமைக் கழகம் (People Union of Civil Liberties - PUCL), “மனித உரிமைகளைக் காக்கவும், மேம்படுத்தவும் சிறிலங்க அரசிற்கு உதவ வேண்டும்” என்று சிறிலங்க அரசு கேட்கிறது. ஆனால் இடம் பெயர்ந்த மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள அப்படிப்பட்ட முகாம்களுக்கு சர்வதேச அமைப்புகளை அனுமதிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் வேண்டுகோள் விடுக்கும் நிலையே அங்கு உள்ளதென சுட்டிக்காட்டி, சிறிலங்க அரசின் முரண்பட்ட நிலையை எடுத்துக் காட்டியுள்ளது ம.ச.உ.க. |