பாலஸ்தீனர்களுக்கு ஏற்பட்ட அவலத்தை நினைத்து துக்க மேலிட்டதால் விக்ரமாதித்தன் அமைதி காக்கிறான். ‘பாலஸ்தீன அதிபருடன் பேசப்போகிறேன், அங்கு என்ன நிலை என்று கேட்கப் போகிறேன்’ என்று வேதாளம் கூறியபோது அதன் மனித நேயத்தைக் கண்டு மெய் சிலிர்த்துப் போகிறான் விக்ரமாதித்தன்.இன்னமும் பல்லாயிரக்கண்கான தமிழர்களை விடுதலைப் புலிகள் தங்கள் பிடியில் வைத்திருப்பதுதான் எனக்கு கவலையாக உள்ளது. அவர்களை கைதிகளாகவே புலிகள் பிடித்துவைத்துள்ளனர் என்று துக்கத்துடன் பேசிய வேதாளம், தமிழர்களுக்கு சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் அந்த இயக்கம் தொடர்ந்து மறுக்குமானால்... என்று கோபத்துடன் உறுமிய வேதாளம்...அப்புறம்... அதனை தடை செய்துவிடுவேன் என்று கூறியது. அதன் மனித உரிமை ஏக்கத்தை நினைத்து வியந்த விக்ரமாதித்தன் மீண்டும் கேள்வி எதையும் எழுப்பவில்லை. இந்த மக்களை ‘கவனிப்பதுதான்’ எனது அரசிற்கு முன்னுரிமை. அவர்களின் பாதுகாப்புதான் எனக்கு முக்கியம், அதனால்தான் அவர்களை ‘விடுவிக்குமாறு’ கேட்கின்றேன் என்று வேதாளம் கூற, அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட விக்ரமாதித்தன் மகிழ்ச்சியுடன் அமைதி காக்கின்றான்.‘அவர்களுக்கு உணவு அனுப்புகிறோம். அவர்களுக்கு மட்டுமல்ல, விடுதலைப் புலிகளுக்கும் உணவு அனுப்புகிறோம். அவர்கள் மக்களை விடுவித்தாலும் அவர்களுக்கு நாங்கள் உணவு அனுப்புவோம்’ என்று கூறியபோது அதன் மனிதாபிமானத்தைக் கண்டு உணர்ச்சிவயப்பட்டு கண்ணீர் உகுத்த விக்ரமாதித்தன், நா தழுதழுக்க தொலைப்பேசியை துண்டிக்கிறான். தமிழர்களின் வாழ்விற்காகவும், உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் கொழும்பு வேதாளம் உருகியதை கேட்டு மனம் நெகிழந்த விக்ரமாதித்தன் அதையே தனது ஆங்கில நாளிதழின் தலைப்புச் செய்தியாகப் போட்டது மட்டுமின்றி,வேதாளத்தின் ‘நல்ல மனதை’ப் புரிந்துகொள்ளாமல், விடுதலை ஒன்றே வழி என்றெல்லாம் பேசிய ஈழத் தமிழர்களின் தலைவர் பேசியதை எள்ளி நகையாடி ஒரு தலையங்கம் தீட்டிவிட்டு நிம்மதியுடன் உறங்கச் சென்றான்.அடுத்த பாகம் விரைவில்... |