எல்லா பிரச்சனைகளிலும் காங்கிரஸ் கட்சியை வேர் முதல் உச்சிவரை எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கட்சி, ஈழப் பிரச்சனையில் மட்டும் அக்கட்சியின் நிலையோடு எல்லா விதத்திலும் ஒத்துப்போகிறது.வாக்குவங்கி அரசியலே! இதேபால், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவும் இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் மீது சிறிலங்க அரசின் முப்படைகளும் நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து கடந்த அக்டோபரில் அனைத்துக் கட்சியினரும் கலந்துகொண்ட கூட்டத்தில் கூட பங்கேற்காத ஜெயலலிதா, ஒரே ஒரு அறிக்கை மட்டும் விடுத்தார். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டில் ஒருமித்த கருத்து இல்லை என்பதை பறைசாற்ற, ‘அ.இ.அ.தி.மு.க.விற்கு இப்பிரச்சனையில் வேறுபட்ட நிலை உள்ளது’ என்பதை அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது மட்டுமின்றி, தனது மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் வாயிலாக உறுதி செய்தவர் ஜெயலலிதா. ஆனால் தமிழர்களின் ‘சுய நிர்ணய உரிமையை ஆதரிப்பதாக’ கூறிய ஜெயலலிதா, அம்மக்கள் சிங்கள விமானப்படை குண்டு வீச்சில் சின்னாபின்னமாகி வருவதைக் கண்டித்தோ அல்லது தாக்குதலை நிறுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தியோ ஒரே ஒரு அறிக்கை கூட அளிக்கவில்லை. ஆனால், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் குண்டு வீசியவுடன் அதனைக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளார். “பாலஸ்தீனத்தில் உள்ள காஸாவில் இஸ்ரேல் நடத்தும் ராணுவ தாக்குதலால் ஆயிரக்கணக்கான (!) அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் உடைமைகளை இழந்துள்ளனர்.என்னதான் ஆத்திர மூட்டும் செயல் நடந்தாலும் இம்மாதிரி அறிவீனமான ஆயுதத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியிருக்க கூடாது. இது இஸ்ரேல் மீது மோசமான எண்ணத்தை சர்வதேச நாடுகளிடம் உருவாக்கி இருக்கிறது.எந்த ஒரு நாட்டையும் மற்றவர் ரத்தத்தின் மீது நிர்மானிக்க முடியாது. அந்த செயலுக்கு நியாயம் கற்பிக்கவும் முடியாது. எந்த ஒரு மதமும் இதுபோன்று உயிர்களை பறிக்க அனுமதிக்கவில்லை.இஸ்ரேலின் இந்த மோசமான தாக்குதலையும், அப்பாவி மக்களை கொல்வதையும் இந்திய அரசு கண்டிக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உணவு, உடைகள், மருந்து போன்ற நிவாரண பொருட்களையும் இந்தியா அனுப்ப வேண்டும்” என்று அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.தமிழர்களிடையே அரசியல் நடத்தி, தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா என்றாவது இப்படி, “எந்த ஒரு நாட்டையும் மற்றவர் ரத்தத்தின் மீது நிர்மானிக்க முடியாது. அந்த செயலுக்கு நியாயம் கற்பிக்கவும் முடியாது. எந்த ஒரு மதமும் இதுபோன்று உயிர்களை பறிக்க அனுமதிக்கவில்லை” என்று சிங்கள ஆட்சியாளர்களைக் கண்டித்தோ அல்லது புத்த பிக்குகளைக் கண்டித்தோ அறிக்கை விடுத்துள்ளாரா? இவ்விரு கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் பாலஸ்தீன மக்களின் மீது பாயும் இந்த மனிதாபிமானம் தமிழர்கள் மீது பாயாததது ஏன்? எல்லாம் வாக்கு வங்கி அரசியல்தான். இப்படி ஒரு கண்டன அறிக்கை கொடுத்தாலோ அல்லது ஒரு போராட்டம் நடத்தினாலோ போதும் குளிர்ந்துபோய் வாக்களித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை. இதுவும் ஒரு விதத்தில் மதவாத அரசியல்தான். மறைமுக மதவாதம், அவ்வளவுதான். மனிதாபிமான அடிப்படையில் தான் கண்டிக்கிறோம் என்று இவர்கள் காரணம் கூறலாம். அப்படியானால் எல்லைத் தாண்டி பாயும் அந்த மனிதாபிமானம், பக்கத்து நாட்டில் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கும் தமிழன் மீது பாயாதது ஏனோ?தமிழர்கள்தான் சிந்திக்க வேண்டும். |