பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஐ.நா.விலிருந்து இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் கண்டித்திருத்திருந்தாலும், நமது நாட்டில் உள்ள இரண்டு கட்சிகள் மிகுந்த மனிதாபிமானத்துடன் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளது மிகவும் கவனிக்கத்தக்கதாகும். ஒன்று, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, மற்றொன்று, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க. இஸ்ரேலின் தென்பகுதியை குறிவைத்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினர் தொடர்ந்து நடத்திய ராக்கெட் தாக்குதலில் சில இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக கடந்த சனிக்கிழமை முதல் ஹமாஸ் இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் கிட்டத்தட்ட 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெருவாரியானவர்கள் ஹமாஸ் இயக்கத்தினர் என்று செய்திகள் கூறினாலும், நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டதையடுத்து இந்தியா அதற்குக் கண்டனம் தெரிவித்தது.இந்திய அயலுறவு அமைச்சகம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல் ‘அதிகப்படியானது’ ‘தேவையற்றது’ என்று கூறியது மட்டுமின்றி, அத்தாக்குதல் ‘கண்டனத்திற்குரியது’ என்று கூறியிருந்தது. மார்க்சிய கட்சியின் கடுங்கோபம்!இந்தியா விடுத்த கண்டன அறிக்கை யு.என்.ஐ. உள்ளிட்ட செய்தி நிறுவனங்களால் தெரிவிக்கப்பட்டாலும், அது பத்திரிக்கைகளிலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ பெரிதாக வெளியாகவில்லை. இந்த நிலையில்தான் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி டெல்லியில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான பிருந்தா காரத் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இஸ்ரேலிற்கு எதிராக கடுமையான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இஸ்ரேல் தொடுத்த இத்தாக்குதல் அரச பயங்கரவாதம் (State Terrorism) என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் முழங்கினர். இஸ்ரேல் நடத்திய இத்தாக்குதலை ஏன் இந்தியா கண்டிக்கவில்லை என்று கோபத்துடன் குரல் எழுப்பினார் பிருந்தா காரத். ஆனால் இந்திய அரசின் அயலுறவு அமைச்சகம் அத்தாக்குதலை கண்டித்திருந்தது. அத்தாக்குதல் அதிகப்படியானது, தேவையற்றது, கண்டனத்திற்குரியது என்று அயலுறவு அமைச்சக அறிக்கை கூறியிருந்தது. அது நாளிதழ்களில் பெரிதாக வெளியிடப்படாததால் அல்லது அதனை அறியாததால் பிருந்தா காரத் இப்படி கோபத்துடன் முழங்கியிருக்கலாம். எப்படியாக இருந்தாலும் அது வரவேற்கத்தக்கதே. தங்கள் நாட்டின் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலிற்கு பதிலடியாக இஸ்ரேல் விமானங்கள் காசா மீது நடத்திய அதிகபட்சமான தாக்குதல்தான். கண்டனத்திற்குரியதுதான். ஆனால் இதைவிட மோசமாக நமது நாட்டிற்கு அருகிலுள்ள இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது அந்நாட்டு இராணுவமும், விமானப்படையும் தொடர்ந்து குண்டு வீசி தமிழர்களைக் கொன்று வருகிறதே, அதனை மார்க்சியக் கட்சி கண்டுகொள்ளாதது ஏன்? தமிழக அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு, அங்கு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, பிறகு வெளியே வந்ததும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல் தொடர்பாக தங்களை நிலை வேறு என்று கூறியதும், அதன் பிறகு எல்லா கட்சிகளுடனும் இணைந்து மனித சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்றதற்குப் பிறகு தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக எந்த ஒரு அறிக்கையையும் மார்க்சிய கட்சி வெளியிடவில்லை. எந்த ஒரு ஆர்ப்பாட்டத்தையும் மத்திய அரசை வலியுறுத்தி நடத்துவுமில்லை. காசாவின் மீது குண்டு வீசிய இஸ்ரேலின் நடவடிக்கையை அரச பயங்கரவாதம் என்று கண்டித்த மார்க்சியவாதிகளுக்கு, ஈழத்தில் ஒரே ஆண்டில் 700 முறை விமானத் தாக்குதல் நடத்தியுள்ளோம் என்று அந்நாட்டின் இராணுவ பேச்சாளரே கூறிய நிலையிலும், அதனை அரச பயங்கரவாதம் என்று கண்டிக்க மனம் வரவில்லை. |