பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சை ‘அதிகபட்சமானது’, ‘தேவையற்றது’ என்று கூறியுள்ள இந்தியா, ஏராளமான மக்கள் கொல்லப்பட்ட அத்தாக்குதலை கண்டித்துள்ளது.இஸ்ரேல் நாட்டின் தென் பகுதி மீது ஹமாஸ் போராளிகள் (இஸ்ரேலைப் பொருத்தவரை பயங்கரவாதிகள்) நடத்திய ராக்கெட் தாக்குதலில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக கடந்த சனிக்கிழமை முதல் காசா பகுதி மீது இஸ்ரேலிய விமானங்கள் சரமாரியாக பறந்து குண்டு வீசி வருகின்றன. இதில் 300க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலைக் கண்டித்துதான் திங்கட்கிழமை மாலை நமது அயலுறவு அமைச்சகம் ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “காசா பகுதியில் உள்ள இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்திவரும் இராணுவ நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும் என்று இந்திய அரசு எதிர்பார்க்கிறது. இத்தாக்குதலில் அளவிற்கு அதிகமான இராணுவ பலம் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளது மட்டுமின்றி, வன்முறையும் பெருகிவருவது ஏமாற்றமளிக்கிறது. இப்படிப்பட்ட தேவைக்கும் அதிகமான படைப்பலம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது தேவையற்றது, கண்டனத்திற்குரியது. காசா பகுதி மீது நடத்தப்பட்டுவரும் இஸ்ரேலின் தாக்குதல், வன்முறையை தொடரவே வழிவகுக்கும் என்பது மட்டுமின்றி, அமைதி முயற்சிகளை தடம்புரளச் செய்துவிடும் என்பதால் அதிகபட்ச கட்டுப்பாட்டை (இஸ்ரேல்) கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய அரசு கேட்டுக்கொள்கிறது” என்று கூறப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை இந்திய அரசு கண்டித்திருப்பது நியாயமானது, அதனை இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். பாலஸ்தீனப் பிரச்சனையிலும், அது தொடர்பாக நமது நாடு கொண்டுள்ள நிலைப்பாட்டையும் அறிந்த எவருக்கும் அந்த அறிக்கையின் ஒவ்வொரு வாக்கியத்திலும் முரண்பாடு ஏற்படுவதற்கு இடமில்லை.காசா பகுதியில் இருந்த இஸ்ரேலின் தென் பகுதி மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதற்காக, அங்குள்ள ‘பயங்கரவாதி’களின் இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகக் கூறிக்கொண்டு இஸ்ரேல் நடத்திவரும் கொலை வெறித் தாக்குதலை நியாயம் என்று (இன்றுள்ள) அமெரிக்க அரசைத் தவிர வேறு எந்த நாட்டு அரசும் ஏற்காது. அத்தாக்குதலில் 300க்கும் அதிகமான அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளதையடுத்து இந்தக் கண்டன அறிக்கையை இந்தியாவின் அயலுறவு அமைச்சகம் விடுத்துள்ளது.நமது கேள்வியெல்லாம், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் இதேபோன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத்தானே இன்றும் இலங்கையில் தமிழர்கள் மீதும் சிறிலங்க விமானப் படை நடத்திவருகிறது? சிறிலங்க விமானப் படை தாக்குதல் நடத்திய பிறகு அந்நாட்டு இராணுவம் எறிகணைகளை வீசியும், பல்குழல் பிரங்கிகளைச் சுட்டும் தாக்குகிறது. இது நீண்ட காலமாக நடந்து வருகிறதே? அதைக் கண்டித்து இந்திய அயலுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை கூட இதுவரை அளிக்காதது ஏன்? கடந்த 25 ஆண்டுகளாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஈழத்தில் இப்படிப்பட்ட தாக்குதல் நடந்துவருகிறதே. இடையில் 2002 முதல் 2005 ஆம் ஆண்டுவரை போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலம் தவிர, சிறிலங்க விமானப் படை விமானங்கள் தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திக்கொண்டுதானே இருக்கின்றன? 2005ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராக ராஜபக்ச பதவியேற்றதற்குப் பிறகு திட்டமிட்டு துவக்கப்பட்டத் தாக்குதல் இந்த ஆண்டில் கண்மூடித்தனமாக நடத்தப்பட்டு வருகிறது. |