ஜம்முவில் இதுவரை இல்லாத அளவிற்கு பாரதிய ஜனதா கட்சி பெரும் வெற்றி பெற்று நான்காவது பெரிய கட்சியாக சட்டப்பேரவையில் அடியெடுத்து வைக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி, ஜம்மு-காஷ்மீரில் அமையப்போகும் ஆட்சியை எந்த விதத்திலும் நிர்ணயிக்கப் போவதில்லை என்றாலும், அதன் சட்டப்பேரவை செயல்பாடு அம்மாநில அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.ஆக, தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் காஷ்மீர் பகுதி மக்களின் பிரதிநிதிகளாகவும், ஜம்மு பகுதியில் உள்ள மக்களின் பிரதிநிதிகளாக காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. இவைகள் தவிர, தேசிய சிறுத்தைகள் கட்சி 3 இடங்களிலும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி (சென்ற தேர்தலில் வென்றதைவிட ஒரு இடம் குறைவாக) ஒரே ஒரு இடத்திலும் வென்றுள்ளன.இதில் குறிப்பாக கவனிக்கத்தக்கது, ஜம்மு பகுதியில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்ப்பற்ற அரசியல் கட்சிகளின் வாக்குகள் இம்முறை பாரதிய ஜனதா கட்சிக்கு சென்றுள்ளதும், தெற்கு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு அதிகரித்துள்ள ஆதரவும் வெற்றியுமாகும். இப்படி ஒரு பெரும் மாறுதல் ஏற்பட எது காரணியாக இருந்துள்ளது என்று பார்த்தால், புனித அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நில ஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்த்து முதலில் காஷ்மீரிலும், பிறகு அதற்கு ஆதரவாக ஜம்முவிலும் நடந்த போராட்டங்கள் மத ரீதியாக வாக்காளர்களின் எண்ணங்களை மாற்றியுள்ளது தெரிகிறது. அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நில ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு வித்திட்டது தேசிய மாநாட்டுக் கட்சி. அதனை அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்த காங்கிரஸ் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் முன்வந்தபோது, காங்கிரஸோடு ஆட்சியில் அங்கம் வகித்த மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவளித்தது. அக்கட்சியைச் சேர்ந்தவர் துணை முதல்வராக இருந்து அதற்கான ஒப்புதலை அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கினார். அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நில ஒதுக்கீடு செய்வதற்கு காஷ்மீரில் உள்ள மதவாத-பிரிவினைவாத அமைப்புகள் தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த எதிர்ப்பு பெரிதாக இருக்கவில்லை. தனது அரசியல் இலாபத்திற்காக அப்பிரச்சனையை முக்கிய எதிர்க்கட்சியாக இருந்த தேசிய மாநாடு கையிலெடுத்ததும் எதிர்ப்பு பெரிய கிளர்ச்சியாக்கப்பட்டது அனைவரும் அறிந்தது. அந்த நிலையில்தான், அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புக்கொண்ட மக்கள் ஜனநாயகக் கட்சி, நில ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்புக் காட்டத் துவங்கியது. அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நில ஒதுக்கீடு செய்து வெளியிடப்பட்ட அரசாணையை திரும்பப் பெறக்கோரிய மக்கள் ஜனநாயகக் கட்சி, அதற்கு காலக்கெடுவையும் நிர்ணயித்தது, ஆதரவை திரும்பப் பெறும் அறிவிப்பையும் வெளியிட்டது. அதன் நிபந்தனையை ஏற்றுக்கொண்டு அரசாணையை முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் திரும்பப் பெற்றப்பிறகும் கூட, ஆதரவை விலக்கிக்கொண்டு ஆட்சியைக் கவிழ்த்தது.அமர்நாத் கோயில் நில ஒடுத்துக்கீடு ஆணையை திரும்பப்பெறக்கோரி நடந்த கலவரத்திலும், காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். |