அப்படிப்பட்ட நிலையில், ஈழத் தமிழர்களின் பாதுகாப்பான எதிர்காலம் எப்படிப்பட்ட தீ்ர்வைச் சார்ந்துள்ளது என்பது தமிழகத்தில், பொது மேடைகளில் விவாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது. அங்கு நடைபெறும் விடுதலைப் போராட்டம் பற்றி பேசாமல் இருக்க முடியாது. சிங்கள அரசு மேற்கொண்டுவரும் இன ஒடுக்கலை வன்மையான வார்த்தைகளால் கண்டிக்காமல் இருக்க முடியாது. அவர்களின் காட்டுமிராண்டித் தாக்குதல்களை தடுத்து நிறுத்தி காத்துவரும் தமீழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தைப் பற்றியும் பேசாமல் இருக்க முடியாது. இவ்வாறு கூறுவது அரசமைப்புச் சட்டம் உறுதிசெய்துள்ள சிந்தனை, கருத்துச் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் ஆகாது. இங்குள்ள சில ஊடகங்களும் பத்திரிக்கைகளும், ‘சிறிலங்க இராணுவத்தின் தாக்குதல் வளையத்திற்குள் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன்’ என்றும், ‘கிளிநொச்சியை பிடிக்கிறது சிறிலங்க இராணுவம்’ என்றும் செய்தி வெளியிடுவதும், சிங்கள அரசு விடும் கதைகளையெல்லாம் அப்படியே வெளியிட்டு பிரசாரம் செய்வதும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இங்கே குரல் எழுப்பினால் அதனை ‘தமிழின வெறி’ என்று கட்டுரை எழுதுவதும், வாராவாரம் கொழும்புவிற்கு ஓடிச்சென்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சவிடம் பேட்டி எடுத்துக்கொண்டுவந்து வெளியிடுவதும் கருத்துச் சுதந்திரம், பத்திரிக்கைச் சுதந்திரம் என்றாகும் போது, சிங்கள இராணுவத்தின் தாக்குதலில் தமிழர்கள் படும் இன்னல்களை செய்தியாகவும், படங்களாகவும் வெளியிடுவதும், இராணவத்திற்கு பதிலடி கொடுத்து விடுதலைப் புலிகள் நடத்தும் தாக்குதலை செய்தியாக்குவதும், விடுதலைப் புலிகளை கொச்சைபடுத்தி எழுதி, அதன்மூலம் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையே களங்கப்படுத்தும் கட்டுரைகளுக்கு பதிலடி கொடுப்பதும் கருத்து, பத்திரிக்கைச் சுதந்திரமே. எனவே இதில் ‘தடை செய்யப்பட்ட’, ‘தடை செய்யப்படாத’ என்று பிரச்சனையே இல்லை. அதில் எந்தச் சட்டச் சிக்கலும் கிடையாது. ஈழ மக்களின் வாழ்வையும், அவர்களின் உரிமைப் போராட்டத்தையும் ராஜீவ் காந்தியில் ஆரம்பித்து, அவருடனேயே முடித்துவிடும் காங்கிரஸ் கட்சியினரின் பார்வையும் போக்கும் தமிழர் எவருக்கும் ஏற்புடையதல்ல.இன்று கூட, விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசுவோரை கைது செய்ய வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ள, தமிழக மக்களின் ‘பேராதரவு’ பெற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே உடன்பாட்டின்படி, “இந்தியாவில் இருப்பதுபோல் இலங்கையிலும் தமிழர்களுக்கு தனி மாநிலம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் 1987ஆம் ஆண்டு எட்டப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் நோக்கமாக இருந்தது” என்று கூறுகிறார். அது தனி மாநிலமல்ல எனும் உண்மையை எடுத்து கூறி விமர்சனம் செய்யும் போது, விடுதலைப் புலிகள் பற்றியும், ராஜீவ் காந்தி பற்றியும் பேசுவது தவிர்க்க இயலாதது. அவ்வாறு பேசும்போது, அதனை இராஜீவிற்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசுகின்றனர் என்று காங்கிரஸார் குற்றம் சாற்றுகின்றனர். எனவே, ஈழத் தமிழர் பிரச்சனை குறித்த கருத்துகள் காங்கிரஸாருக்கு ஏற்பற்றதாக இருக்கலாம். ஆனால், அம்மக்கள் எது தங்களுக்கு சரி என்று நினைக்கின்றார்களோ அதனை ஆதரிக்கவும், அதற்காக போராடும் அந்த இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது என்பதும் எந்த விதத்திலும் இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிரானது என்று கருதுவதற்கு இடமில்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலேயே சிந்தனைச் சுதந்திரத்திலிருந்து கருத்துச் சுதந்திரத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதனை தங்கள் அரசியல் வசதிக்காக காங்கிரஸார் வளைக்க முற்படுவதும், அவர்கள் உருவாக்கும் அரசியல் நெருக்கடியைத் சமாளிக்க தமிழக முதல்வரைப் போன்ற ஒரு அனுபவமிக்க மூத்த அரசியல் தலைவர் வளைந்து கொடுப்பதும் சட்டத்தின் ஆட்சியை சரியாக நிலைப்படுத்துவது ஆகாது. இந்தியாவின் இரும்பு பெண்மணியாக திகழ்ந்த இந்திரா காந்தி, அலகாபாத் தேர்தல் தீர்ப்பையடுத்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள, தனது ஆட்சியைக் காத்துக்கொள்ள இந்திய திருநாட்டின் மீது அவசர நிலையைத் திணித்தார். அது அவரது ஆட்சியின் வீழ்ச்சிக்குத்தான் அடிகோலியது. அன்றைக்கு அதனை எதிர்த்து தனது ஆட்சியை இழந்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அதற்காக இந்தியத் தலைவர்களிடம் தி.மு.க. தலைவரின் புகழ் உயர்ந்தது.இன்று காங்கிரஸார் கொடுக்கும் நெருக்கடிக்காக, தமிழ்நாட்டில் கருத்துரிமையை பறிக்க தமிழக அரசு முற்பட்டால் அதன் எதிர்வினை மக்கள் மன்றத்தில் - எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் - கடுமையாக எதிரொலிக்கலாம். அதற்கு கடந்த மக்களவைத் தேர்தலே சாட்சி. தேர்தலில் தி.மு.க.வை காப்பாற்றும் சக்தி காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. |