“எப்போதெல்லாம் நாங்கள் அரசியலில் இறங்கும் நோக்குடன் வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு அடி வைக்கிறோமோ, அப்போதெல்லாம் பாரதிய ஜனதா கட்சி போபர்ஸ் பீரங்கி பேர வழக்கைப் பற்றிப் பேசுவது வாடிக்கையாகிவிட்டது” என்று ராகுல் காந்தி ஒருமுறையல்ல பலமுறை கூறியுள்ளார்.அப்படி பாரதிய ஜனதா கட்சி போபர்ஸ் ஆயதத்தை எடுத்தபோதெல்லாம் அவர்களும் பின்வாங்கிக் கொண்டு, தீவிர அரசியலில் ஈடுபடும் திட்டத்தை பலமுறை தள்ளிப்போட்டார்கள் என்பதும், ஒரு வழியாக போபர்ஸ் ஒழிந்த பின்னரே அவர்கள் தீவிர அரசியலில் இறங்கினார்கள் என்பதும் இந்திய அரசியலை கூர்ந்து கவனித்து வரும் அனைவருக்கும் தெரியும். இதேபோன்று, எப்போதெல்லாம் ஈழத் தமிழ் மக்களுக்காக தமிழ்நாட்டில் ஆதரவுக் குரல் எழுகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர்களுக்கு ராஜீவ் காந்தி படுகொலை நினைவிற்கு வந்துவிடும். ஈழத் தமிழரின் இன்னல் பற்றிப் பேசினால் இவர்கள் விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேசுவார்கள். தற்போது, இலங்கையில் தமிழர்கள் மீது ஒரு பெரும் போரைத் துவக்கி வேகமான இன ஒழிப்பில் சிறிலங்க அரசும், இராணுவமும் ஈடுபட்டுவரும் நிலையில், பாதிக்கப்பட்டத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் குரல் கொடுத்துவரும் நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மட்டும், ராஜீவ் காந்தி படுகொலையை மறக்காமல் பேசி வருகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஈழத் தமிழர்கள் பிரச்சனை என்றாலே விடுதலைப் புலிகள் பிரச்சனைதான். அதனால்தான் சிறிலங்க இராணுவம் சகட்டுமேனிக்கு குண்டு வீசி சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்துவரும் போதும், அதனை கட்சிரீதியாக கண்டித்து ஒரு அறிக்கை கூட விடுக்காத காங்கிரஸ் கட்சி, அவர்களுக்காக குரல் எழுப்புபவர்கள் ஈழ விடுதலை பற்றியோ அல்லது அதற்காக போராடும் விடுதலைப் புலிகள் பற்றியோ பேசினால், உடனடியாக ஒரு அறிக்கை வெளியிட்டு, “எங்கள் தலைவரைக் கொன்ற விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் அந்த தேச விரோதிகளை கைது செய்” என்று குரல் எழுப்புகிறார்கள். இப்படி இலங்கைத் தமிழர்களுக்காக இராமேஸ்வரத்தில் குரல் கொடுத்த இயக்குனர்கள் சீமானும், அமீரும் கைது செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ்காரர்கள் சொல்ல அதனை சிரமேற்கொண்டு தமிழக முதலமைச்சரும் நிறைவேற்றி வைத்தார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், அக்கட்சியி்ன் அவைத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு. கண்ணப்பனும் கூட கைது செய்யப்பட்டார்கள்.இன்றும் அதுதான் நடந்துள்ளது. “சீமானை கைது செய்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உத்தரவிட, திண்டுக்கல்லில் படப்பிடிப்பில் இருந்த சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.சீமானை கைது செய்வதற்கு காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் தங்கபாலு கூறியுள்ள காரணங்கள் விநோதமானவை. ”தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசுவதும், ராஜீவ் காந்திப் படுகொலையில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரபாகரனை தமிழர் தலைவர் என்று புகழ் பாடுவதும் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது” என்று கூறியுள்ளார். என்னே சட்ட ஞானம்!விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானதா? ஒரு கட்சியின் தலைவராக உள்ளவர் சட்ட மேதையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், இவ்வளவு பாமரத்தனமாகவா இருப்பது? இதில் இந்திய அரசியல் சட்டப் பிரச்சனை எங்கே வருகிறது. ஜெயலலிதாவே தேவலாம் என்றெல்லவா காட்டியுள்ளார். அவர் வைகோவை கைது செய்து சிறையில் தள்ளியபோது கூட பொடா சட்டத்தின் கீழ்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறினார். தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது பொடா சட்டப்படி குற்றமே என்று கூறி, அந்தச் சட்டமளிக்கும் அதிகாரத்தின்படி, ஒன்றரை ஆண்டுகளுக்கு வைகோ உள்ளிட்ட பலரை சிறையில் வைத்தார். தனது கைதை எதிர்த்து வைகோ உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ததை விசாரித்த நீதிபதிகள், தடை செய்யபட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது அதற்கு உதவுவதாக ஆகாது என்று கூறினர். பிறகு அச்சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவும் வைகோ ஆதரித்துப் பேசியதில் தவறில்லை என்றே கூறியது. இப்போது பொடா சட்டமும் இல்லை. |