( ஒபாமா: சாதனையை தொடரும் சோதனைகள்-2)அமெரிக்காவின் முதலீட்டு வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும், பரஸ்பர நிதி நிறுவனங்களும் திவாலானதால் உருவான நிதி நெருக்கடி முதலில் ஐரோப்பாவையும், பிறகு ஜப்பானையும் அதன் பிறகு சீனா, இந்தியா மட்டுமின்றி, உலகின் ஒவ்வொரு நாட்டையும் கடுமையாக பாதித்து வருகிறது.லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கிழக்காசிய நாடுகள் வரை வளர்ந்த நாடுகளின் பொருளாதார பின்னடைவு அவைகளின் உள்நாட்டு பொருளாதாரத்தில் இருந்து ஏற்றுமதி, வேலை வாய்ப்பு வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய பொருளாதாரத்தில் அங்கமாகும் ஒவ்வொரு நாடும் முன்னேறிய நாடுகளில் ஏற்படும் இப்படிப்பட்ட சரிவுகளினால் உருவாகும் சுமைச் சிலுவையை சுமந்துதான் ஆக வேண்டும், தனித்து தப்பித்துக் கொள்ள வாய்ப்பில்லை.ஆயினும் ஆசியாவின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் சீனாவும், இந்தியாவும் மட்டும்தான் இந்த சர்வதேச அளவிலான பொருளாதாரப் பின்னடைவால் பாதிக்கப்பட்டாலும், அவைகளின் பலமான உள்நாட்டு பொருளாதார அடிப்படைகளின் பலத்தின் காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டாலும், பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன. அது என்ன நிதி நெருக்கடி வேறு, பொருளாதாரப் பின்னடைவு வேறு? இதனைப் புரிந்துகொள்ள நமது நிதியமைச்சர் (இப்போது அவர் உள்துறை அமைச்சர்) ப. சிதம்பரம் கூறியுள்ளதை பார்க்க வேண்டும். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்நாட்டின் ஒராண்டு ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும் (Gross Domestic Product - GDP). கடந்த 2007-08 நிதியாண்டில் நமது நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.8 விழுக்காடு ஆகும், அதற்கு முந்தைய ஆண்டை (2006-07) விட இது 0.2 விழுக்காடு அதிகரித்திருந்தது. அதாவது கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.6 விழுக்காடாகும். நடப்பு நிதியாண்டில் (2008-09) இந்த ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7 முதல் 7.5 விழுக்காடு அளவிற்கு (இந்திய மைய வங்கியும், நிதியமைச்சகமும், திட்டக் குழுவும் தெரிவித்துள்ளதுபடி) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வேளாண் உற்பத்தி மட்டும் கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 4.5 விழுக்காடு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே நமது நாடு வேளாண் உற்பத்தி வளர்ச்சியும், உணவு இருப்பும் (இதுவரை 276 மில்லியன் டன் நெல்லும், 220 மில்லியன் டன் கோதுமையும் மத்திய அரசால் மட்டும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன) போதுமான அளவிற்கு உள்ளதால், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பின்னடைவின் காரணமாக நமது நாட்டில் தொழில் உற்பத்தி, வேலை வாய்ப்பு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதே தவிர, பொருளாதார பின்னடைவு ஏற்படவில்லை. ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சி அதன் இரண்டாவது காலாண்டில் 0.02 விழுக்காடு (கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டோடு ஒப்பிடுகையில்) குறைந்துள்ளது. ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதாரமான ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சி 0.03 விழுக்காடு குறைந்துள்ளது. ஜப்பானின் உள்நாட்டு உற்பத்தியும் குறைந்துள்ளது. இது அந்நாடுகளில் இதுவரை காணாத ஒரு சரிவாகும். ஆனால் இந்திய, சீன நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மட்டுமே, கடந்த ஆண்டு வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளனவே தவிர, வளர்ச்சியின்றிப் பின்னடைவைச் சந்திக்கவில்லை.அதனால்தான் நமது நாட்டின் பொருளாதார அடிப்படைகள் பலமாக உள்ளதென்று அமைச்சர் சிதம்பரம் அடிக்கடி கூறி வந்துள்ளார்.ஆயினும், நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு எந்த அளவிற்கு நமது மக்களை பாதித்துள்ளது? பாதிக்கப் போகிறது? என்பதற்கு சமீப நாட்களில் வெளிவந்துக் கொண்டிருக்கும் செய்திகள் பார்க்க வேண்டும். |