மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகள், அவர்களின் பின்னணி தொடர்பான புலனாய்வு சரியான திசையில் செல்லுமா என்ற கவலை எழுந்துள்ளது.
நமது நாட்டின் நாளிதழ்களிலும், (தனியார்) தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களிலும் ஒவ்வொரு கணமும் வெளியாகி வரும் செய்திகளில் பல பிரச்சனையை திசை திருப்பும் நோக்கம் கொண்டவையாகவே தெரிகிறது. பாகிஸ்தானில் இருந்து வரும் செய்திகளிலும் இதே நிலைதான் உள்ளது.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து கடல் வழியாக வந்து மும்பைக்குள் ஊடுறுவி தாக்குதல் நடத்திய ஒரே காரணத்திற்காக, அவர்களுக்கு பாகிஸ்தான் அரசு உதவியது போலவும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா அந்நாட்டின் மீது போர் தொடுக்கும் என்பது போலவும் இரு நாடுகளிலுமே செய்திகள் வருகின்றன.
இந்தியாவி்ற்கு எதிராக நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் பலவற்றின் பின்னணியில் பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இருந்துள்ளதையும், காஷ்மீரில் இருந்து மும்பை வரை நடைபெற்ற தாக்குதல்கள் பலவற்றில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் (அதுவும் அந்நாட்டின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில்) தான் பயிற்சியளிக்கப்பட்டது என்பதையும், அதற்கான ஏற்பாடுகளை முகாம் அமைத்து செயல்படுத்தி வருவதும், வந்ததும் ஐ.எஸ்.ஐ. தான் என்பதையும் மறுக்க முடியாது. இது இந்தியாவிற்கு மட்டுமல்ல, இன்றைக்கு பாகிஸ்தான் மீது அழுத்தம் தரும் வகையில் பேசிவரும் அமெரிக்காவிற்கும், அதன் நேச நாட்டு கூட்டாளிக்கும் தெரியாததும் அல்ல.
ஆனால் பாகிஸ்தானின் அதிபராக ஜென்ரல் பர்வேஷ் முஷாரஃப் இருந்த வரையில், இந்தியா எடுத்து வைத்த ஆதாரங்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க அந்நாட்டு அரசை அமெரிக்கா வலியுறுத்தவில்லை.
2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி இந்தியாவின் நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதில், பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.யின் ‘அன்புக் கர’த்திற்குள் பாதுகாப்பாக இருந்த லஸ்கர் ஈ தயீபா, ஜெய்ஸ் ஈ மொஹம்மது ஆகிய இரண்டு பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களை கைது செய்து ஒப்படைக்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்தது. அதற்கு உடன்படாத முஷாரஃப், ஆதாரத்தை தாருங்கள் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்றார். பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது இந்தியாவில், அதுவும் நாடாளுமன்றத்தின் மீது, ஆனால் பாகிஸ்தானில் விசாரிக்கிறேன் என்று முஷாரஃப் முறையற்றுப் பேசினார். அமெரிக்க அதிபர் புஷ் நமது பிரதமர் வாஜ்பாயை அழைத்து துக்கம் விசாரித்ததுடன் முடித்துக் கொண்டார்.
நாடாளுமன்ற பயங்கரவாத தாக்குதலிற்குக் காரணமான பயங்கரவாதிகளை கையளிக்க பாகிஸ்தான் மறுத்ததையடுத்து, போர் தொடுக்கத் தயாரானது இந்தியா. படைகள் எல்லைகளுக்கு நகர்த்தப்பட்டன. பாகிஸ்தானும் தனது படைகளை எல்லைகளுக்கு நகர்த்தியது. போர் நிச்சயம் என்றான சூழ்நிலையில் |