இல்லையென்றால், நேற்று இதே நாளிதழில் எழுதப்பட்ட தலையங்கம் ஒன்றில், ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தங்கள் நாட்டிலேயே அராஜகத்தை கட்டவிழ்த்து மிகப்பெரிய படுகொலைகளை நடத்திவரும் அரசுகளுக்கு ஆயுதங்களை விற்பதில்லை என்பது தொடர்பாக ஐ.நா.வில் விவாதிக்கப்படவுள்ள தீர்மானம் குறித்து எழுதிய தலையங்கத்தில் கூட, கால் நூற்றாண்டிற்கும் மேலாக திட்டமிட்ட இன ஒழிப்பை மேற்கொண்டு, ஒரு இலட்சம் தமிழர்களை அழித்த சிறிலங்க அரசை அது குறிப்பிட்டிருக்குமே. ஏன் குறிப்பிடவில்லை?
சிறிலங்க அரசை மட்டுமல்ல, சீன அரசிற்கு எதிராக திபெத்திய மக்களின் எழுச்சியைக் கூட இந்த நாளிதழ் தொடர்ந்து கொச்சைபடுத்திதான் எழுதிவந்தது. சீன அரசிற்கு ஆதரவாகவே கட்டுரைகளை வெளியிட்டும் வந்தது. நமது நாட்டைச் சேர்ந்த வரலாற்றாளர்கள் பலர் சீன அரசு எப்படியெல்லாம் திபெத்தியர்களை ஒடுக்கியது என்பதை விவரித்து, அது தொடர்பான சில கேள்விகளையும் முன் வைத்தபோது அதற்கு எந்தப் பதிலும் கொடுக்க முடியாமல் தனது பொய்யாடலை நிறுத்திக்கொண்டது இந்த நாளிதழ்.
இலங்கைத் தமிழர்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு, அவர்கள் நிர்கதியற்று நிற்கும் இச்சூழலில் உண்மையை உலகிற்கு கூறி, சிறிலங்க அரசு மேற்கொண்டுவரும் இன ஒடுக்கலை தடுத்து நிறுத்த இந்திய அரசையும், மற்ற உலக நாடுகளையும் தட்டி எழுப்ப கட்டுரை எழுத வேண்டிய இந்த பாரம்பரிய நாளேடு, அவர்களை பூண்டோடு அழிக்கும் திட்டத்தை நிறைவேற்றிவரும் சிறிலங்க அரச பயங்கரவாதத்திற்கு வலிமை சேர்த்துக்கொண்டிருப்பது அதன் உள் நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
தமிழர்கள் சிந்திக்கத் திறானியற்றவர்கள் அல்லர். அவர்களை திசை திருப்ப முடியாது. இலங்கைத் தமிழர்களை இன்றல்ல, என்றைக்கும் தமிழ்நாட்டு தமிழர்கள் விட்டுத் தர மாட்டார்கள். ஏனெனில் அந்த உறவிற்கும் ஒரு பாரம்பரியம் உண்டு. அது உலகிற்கு வழிகாட்டியாய் திகழும் பண்பாட்டின் பிரதிபலிப்பு.
“இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் கிளர்ந்தெழுவதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்” எனும் அதன் ஆவல் வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.
ஊடகத்தின் தலையாய பண்பு அது உண்மையைச் சார்ந்து நிற்க வேண்டும். அதுதான் அதன் தர்மம். அதுவே மக்களின் தகவலறிதல் எனும் கருத்துரிமைக்கு ஒரு பத்திரிக்கை அளிக்கும் உண்மையான மதிப்பு. அதைத் தவிர்த்துவிட்டு, எருதின் புண் காக்கை அறியாது என்பதுபோல், தமிழரின் துயரை மறைத்து, அந்த இனத்தை பூண்டோடு அழிப்பதற்கு துணைபோவதும், அந்த ஈன நடவடிக்கையில் ஈடுபடும் அரசிடமிருந்து விருதையும், பட்டத்தையும் பெறுவதும் மாண்புடைய பத்திரிக்கை தர்மத்தை மானபங்கம் செய்வதாகும். |