அதுபோலவே, இப்படிப்பட்ட புவியியல் மாற்றங்களால் கடல் சீற்றம் ஏற்பட்டு (2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ல் சுமத்ரா அடுத்த கடற்பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தால் உருவான சுனாமி போன்று) சில நிலப்பகுதிகள் கடலால் அரிக்கப்பட்டு மூழ்கடிக்கப்படுவதும் உண்டு. அப்படிப்பட்ட பெரும் கடற்பேரழிவுகள் நமது தமிழ்நாட்டின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்துள்ளது என்பதனை புவியியலாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் கூறியுள்ளனர். அது பாடங்களாகவும் உள்ளது.
இன்றைய தமிழ்நாடும், இலங்கைத் தீவும் ஒரு காலகட்டத்தில் ஒன்றாக இருந்த நிலப்பகுதிகளே. மிகப் பெரிய பூகம்பமும், கடல்கோளும் ஏற்பட்டு அதனால் பிரிந்த பகுதியே இன்றைய இலங்கைப் பகுதியாகும் என்பது புவியியலாளர்கள் ஒப்புக்கொண்ட உண்மையாகும்.
அவ்வாறு கடல்கோளால் விழுங்கப்பட்ட நிலப்பரப்பின் சில பகுதிகளே தமிழக, இலங்கைக்கு இடையிலான கடற்பகுதியில் தீவுகளாகவும், நிலத் திட்டுக்களாகவும் உள்ளன. இப்படி இயற்கைச் சீற்றத்தால் கடலில் மூழ்கிப் போன நிலப்பகுதியை ராமர் பாலம் என்று கூறுவது உண்மை கலப்பற்ற பிதற்றலாகும்.
நாசா இந்த நிலப்பகுதியை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படத்தை வெளியிடும் வரை, இதே மதவாதிகள் என்ன கூறிக்கொண்டிருந்தார்கள் என்பது ராமேஸ்வரம் சென்று வந்தவர்களுக்குத் தெரியும். அங்குள்ள ஒரு கோயிலில் ஒரு தொட்டியில் பவழப்பாறை என்றழைக்கப்படும் மிதக்கும் கல்லை காட்டி, இப்படிப்பட்ட கற்களைக் கொண்டுதான் ராமர் படை மிதக்கும் பாலம் கட்டி கடலைக் கடந்து இலங்கை சென்று ராவணன் படையுடன் போரிட்டது என்று அங்குள்ள பூசாரி கூறுவார்.
ஆக, சில மாதங்களுக்கு முன்பு வரை ராமர் பாலம் தொடர்பான கதை இப்படித்தான் இருந்தது. நாசா செயற்கைக்கோள் புகைப்படம் வெளியிட்டவுடன் இந்த மதவாதிகள் புதிய பாலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இப்புவியின் தோற்றம் முதல் அதன் பரிணாம வளர்ச்சி வரை ஒவ்வொரு கட்டத்தையும் ஆய்ந்து அதற்கான ஆதாரங்களைக் கண்டு ஒவ்வொரு உண்மையாக விஞ்ஞான உலகம் நமக்கு மெய்ப்பித்துத் தருகிறது. தனது முடிவிற்கான ஆதாரத்தையும் மக்கள் முன் வைக்கிறது விஞ்ஞானம்.
விஞ்ஞானம் கண்டு புலப்படுத்திய ஒரு இயற்கை உண்மையை தனது இதிகாச, புராண கதைக்கு ஆதாரமாக்கி மக்களின் முன்னேற்றத்திற்கான ஒரு திட்டத்தையே பாழடிக்க முயற்சிக்கிறது மதவாதம்.
தமிழர்களுக்கு கடவுள் பக்தியும் உண்டு. சிந்தித்து ஆராயும் புத்தியும் உண்டு. ஆதாரமற்ற கட்டுக்கதைகளை நம்பி அவர்கள் தங்களை இழந்துவிடுவார்கள் என்று மதவாதிகள் நினைத்தால் அவர்கள் ஏமாந்து போவார்கள்.
சேது சமுத்திரத் திட்டம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், நமது நாட்டின் கடல் வழிப் போக்குவரத்திற்கும் ஒரு வரப்பிரசாதமாகக் கருதப்படும் உன்னதத் திட்டமாகும். இத்திட்டத்தை, உள்நோக்கத்துடன் மதச்சாயம் பூசி கெடுக்க முனையும் சக்திகளை மக்கள் இனம் கண்டு புறந்தள்ள வேண்டும்.
|