பணாமா போலவே, ஓரளவிற்கு படித்தவர்கள் அறிந்த மற்றொரு நீர் வழி சூயஸ் கால்வாய் ஆகும். மத்தியத் தரைக்கடலையும், செங்கடலையும் இந்த நீர் வழி இணைக்கிறது. இந்தக் கால்வாய் ஐரோப்பிய கண்டத்தையும், ஆப்ரிக்க கண்டத்தையும் மெல்லிய நிலப்பகுதியாய் இணைக்கும் நிலத்திட்டில் வெட்டப்பட்டே உருவாக்கப்பட்டதாகும்.
நியூ ஸீலாந்தின் வட பகுதியில் உள்ள ஆக்லாண்டு தீவின் மேல் பகுதியை அதன் கீழ் பகுதியில் உள்ள கிரேட்டர் ஆக்லாண்டுடன் இணைக்கும் பகுதியும் ஒரு சின்ன நிலத்திட்டுப் பகுதிதான். அது கடலில் மூழ்கியுள்ளது.
கனடா நாட்டில் நியூ ஃபவுண்ட் லாண்ட் என்றழைக்கப்படும் தீவுப் பகுதியை கனடா நாட்டுடன் இணைப்பதும் இப்படிப்பட்ட நிலத் திட்டுதான். ஃபால்க்லாண்டை போரை யாரும் மறந்திருக்க முடியாது. அர்ஜெண்டினாவின் கடல் பகுதியில் உள்ள அந்தத் தீவின் கிழக்குப் பகுதியை மேற்குப் பகுதியில் உள்ள தீவு இப்படிப்பட்ட நிலத் திட்டுகளால்தான் இணைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்ட்ரேலியாவில் டாஸ்மானியா பகுதியை ஒட்டியுள்ள புரூனி தீவுகள் ஒரு சிறு நிலத் திட்டுப் பகுதியால் டாஸ்மீனியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் மீதுதான் டீ‘எண்ட்ரி கேஸ்ட்டியக்ஸ் சேனல் என்றழைக்கப்படும் நீர் வழி உள்ளது.
இப்படிப்பட்ட பெரும் நிலப்பகுதிகளுடன் சிறு நிலப் பகுதிகளை இணைக்கக்கூடிய நிலத்திட்டுக்கள் உலகில் ஏராளம் உள்ளன. அப்படித்தான் ராமேஸ்வரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் நிலத்திட்டு உள்ளது. இது பாலம் அல்ல. அப்படியென்றால், இப்படிப்பட்ட நிலத்திட்டுக்கள் எவ்வாறு ஏற்பட்டது?
புவியியல், பூகோளவியல் படித்த மாணவர்களுக்கு இந்த உலகம் கடந்து வந்த பரிணாம வளர்ச்சி குறித்தும் படித்திருப்பார்கள். ஒரு நேரத்தில் (முன்னொரு காலத்தில் என்பதுபோல) அதாவது, பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இன்று தனித்தனி கண்டங்களாகப் பிரிந்துள்ள நமது புவியின் நிலப்பகுதி ஒன்றிணைந்து ஒரே நிலப்பகுதியாக இருந்தது. அதனை பாங்கியா என்று புவியியலாளர்கள் அழைக்கின்றனர்.
புவியின் மையப் பகுதியில் இறுகாமல் அதிக வெப்ப நிலையில் உள்ள நெருப்புக் குழம்பாய் உள்ள மையப் பகுதி இறுக ஆரம்பித்ததால் அதன் மேற்பகுதி சுருங்க ஆரம்பித்ததன் காரணமாக ஒன்றாய் இருந்த அந்த நிலப்பகுதி பலவாய் பிளந்து நகர ஆரம்பித்தன. இதனைத்தான் கண்டங்களின் விலகல் (காண்டினெண்டல் டிரிஃப்ட்) என்று கூறினார்கள். வேகனர்ஸ் காண்டினெண்டல் டிரிஃப்ட் தியரி என்பது நிலவியல் பாடத்திற்கும், நிலவியல் மாற்றங்களுக்கு அடிப்படையான நிலநடுக்கம் உள்ளிட்ட ஆராய்ச்சிகளுக்கும் அடிப்படையாகும்.
நிலநடுக்கம் என்பதே, பெரும் கண்டங்களையும், நிலப்பகுதிகளையும் தாங்கி நிற்கும் புவிப் பரப்பின் பெரும் பாறைகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதாலும், ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்வதனாலும் ஏற்படும் நிகழ்வுகளே.
இவ்வாறு ஒன்றாய் இருந்த அந்த நிலப்பகுதி, பெரும் நிலப்பகுதிகளாக (கண்டங்கள்) தனித்தனியாக பிரிந்து விலகியபோது, விலகிய அப்பகுதிகளுக்கு இடையே இருந்த நிலப்பகுதிகள் கடலில் மூழ்கின. அப்படி மூழ்கிய பகுதிகளின் முனைகள்தான் இப்படி இரண்டு நிலப்பகுதிகளுக்கு இடையே தெரியும் நிலத்திட்டுக்களாகும்.
|