ஆனால், தொழிலாளர்களின் இயக்கத்தை உடைத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்ட சிகாகோ கமர்ஷியல் கிளப் உறுப்பினர்களின் தூண்டுதலின் காரணமாக இலினாய்ஸ் தேசியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டிக்க அனார்க்கிஸ்ட் எனும் தொழிலாளர் அமைப்பு மே 4ஆம் தேதி ஹே மார்க்கெட் ஸ்கொயர் எனுமிடத்தில் ஒரு கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது.
அந்தக் கண்டனக் கூட்டத்தில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கூடினர். கூட்டம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 180 பேர் கொண்ட இலினாய்ஸ் தேசியப் படையினர் தொழிலாளர்களை கலைந்து செல்லுமாறு கட்டளையிட்டனர்.
மேடையில் பேசிக் கொண்டிருந்தவர்கள் கீழே இறங்கியபோது திடீரென்று தேசியப் படையினர் மீது குண்டு ஒன்று வீசப்பட்டது. அதில், ஒருவர் கொல்லப்பட்டார். 70 பேர் காயமடைந்தனர். கோபமுற்ற தேசியப் படையினர் தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். பலர் காயமுற்றனர்.
தேசியப் படையினர் மீது குண்டு வீசியது யார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், அதை காரணமாக்கி தொழிலாளர் இயக்கத்தின் மீது அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. இயக்கத்தை ஏற்பாடு செய்து வந்த தலைவர்களின் இல்லங்கள் சோதனை என்ற பெயரில் சிதைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு எந்தக் காரணமும் கூறப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொழிலாளர் இயக்கத்தை முன் நின்று நடத்திய அனார்க்கிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 8 பேர் கொலை சதித் திட்டம் தீட்டியதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 8 பேரையும் குற்றவாளிகள் என்று எவ்வித ஆதாரமும் இல்லாமல் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் அனைவரும் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட வேண்டும் என்றும் தண்டனை விதிக்கப்பட்டது.
1887ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அனார்க்கிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஆல்பர்ட் பார்ஸன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், அடாஃல்ப் ஃபிஷ்ஷர், ஜார்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர். லூயிஸ் லிங்க் என்பவர் சிறைச் சாலையில் தற்கொலை செய்து கொண்டார். மற்ற மூவரும் 1893ஆம் ஆண்டு மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து தொழிலாளர்களின் உரிமை கோரிக்கையும், இயக்கமும் வலிமை பெற்றது. 8 மணிநேரம் கொண்ட உழைக்கும் தினமும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறையும் கிடைத்தது. உலகெங்கிலும் உழைக்கும் மக்களின் உரிமைகள் நிறைவேற, மானுடத்தை உயர்த்த அரும்பாடுபட்ட அந்த உழைக்கும் மக்கள் கூட்டத்தை மனிதாபிமானத்தோடு பார்க்க உலகம் கற்றுக்கொண்டது.
அமெரிக்காவில் உருவான மே தினம் தொழிலாளர்களின் ஒற்றுமை தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்பதே மே தினம் அளித்த உரிமை முழக்கமாகும்.
தமிழ்.வெப்துனியா.காம்-ன் மே தின வாழ்த்துகள்.
|