சென்னைச் சந்தையில் கடந்த 6 மாதங்களாக மட்டும் அத்யாவசியப் பொருட்களின் விலைகள் எந்த அளவிற்கு ஏறியுள்ளது என்பதை நேரில் விசாரணை செய்து தமிழ்.வெப்துனியா.காம் செய்தி வெளியிட்டதே. விலையேற்றத்தை முதலில் உணர்வது மக்கள்தான், அதன் பிறகே - அவர்களின் எண்ணங்களை ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் பிரதிபலிக்கின்றன. எனவே விலையேற்றப் பிரச்சனையில் மக்களை யாரும் பிரச்சாரத்தால் அச்சுறுத்திட முடியாது.
மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே போகிறது என்று ஒரு மாயையை உருவாக்கி குளிர்காய்ந்துக் கொண்டிருந்தது. விவசாயிகள் தற்கொலையும், விலையேற்றமும் அந்த மாயையை உடைத்துவிட்டன. விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதாக அறிவித்த பிறகும் விதர்ப்பா பகுதியில் 125 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று வந்துள்ள தகவல்களினால் அதிர்ச்சியுற்று, என்ன செய்வது என்று புரியாமல் கையை பிசைந்துக் கொண்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. புதிய பொருளாதாரக் கொள்கை, சந்தைப் பொருளாதாரம், உலக மயமாக்கல் ஆகியன இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதாக கூறியதெல்லாம் இன்றைக்கு எதிர்மறையான விளைவுகளை அளித்துக் கொண்டிருப்பதைக்கண்டு இந்தப் பொருளாதார மேதைகள் குழம்பிப் போயுள்ளனர்.
விலையேற்றம் உலகளாவியப் பிரச்சனை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் அறிக்கை விடுகிறார். பணவீக்கம் அதிகரிக்கும் போதெல்லாம், அது பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தின் விளைவு என்று கூறிவந்தனர்.
இன்று, உணவுப் பொருட்கள் முதல் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விலையேறிவிட்டன. கட்டுமானப் பொருட்கள், மனைகள், வீட்டு வாடகை, தொழிற்சாலை இடுபொருட்கள் என்று அனைத்தும் விலையேறி மக்களை விழி பிதுங்கச் செய்து வருகின்றன.
இந்த நிலையில், பிரச்சனையை நேராக பார்த்து அதற்கு தீர்வு காண்பதற்கான வழிகளை கண்டு நடைமுறைப்படுத்தத்தான் ஒரு அரசு முயற்சிக்க வேண்டுமே தவிர, ஆட்சியில் இருந்துகொண்டு மற்றவர்களைக் குறைகூறக் கூடாது.
|