விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது, எனவே மக்களை அச்சுறுத்தம் நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட வேண்டாம் என்று பிரதமர் மன்மோகன் சிங் திருவாய் மலர்ந்துள்ளார்.
உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்களில் இருந்து அனைத்துப் பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் ஏறிவரும் நிலையில், மக்கள் படும் துயரைக் குறைக்க விலைவாசியைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு இடதுசாரிகளும், மற்ற எதிர்கட்சிகளும் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் அரசை கடுமையாக நிர்பந்தித்துவரும் நிலையில், விலைவாசியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது என்று பிரதமர் அறிக்கை விடுத்திருந்தால் அது அவரது பொறுப்புணர்ச்சியைக் காட்டியிருக்கும்.
ஆனால், அவர் விடுத்துள்ள அறிக்கையில் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள், அரசின் கையாலாகத்தனத்தை மறைக்க, எதிர்க்கட்சிகளை குற்றம்சாற்றும் சராசரி அரசியல் நடத்தையாகவே தெரிகிறது.
“விலையேற்றத்தினால் அவதியுறும் மக்களின் அவலங்களை அரசிலாக்கினால், அது ஏதோ பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது போன்ற ஒரு சூழலை உருவாக்கிவிடும், அது ஊக வணிகர்களையும், பதுக்கல்காரர்களையும்தான் ஊக்குவிக்கும்” என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
விலையேற்றம் குறித்தும், பொருட்களின் பற்றாக்குறை குறித்தும் எதிர்கட்சிகள் பிரச்சாரம் செய்வதுதான் அதுகுறித்து ஊக வணிகர்களுக்கும், பதுக்கல்காரர்களுக்கும் தெரியவருமா? பிரதமரின் பேச்சு மிக நகைச்சுவையாகதான் இருக்கிறது.
இதுமட்டுமல்ல, “விலையேற்றத்தை காரணமாக்கி மக்களின் அவலத்தை அரசியலாக்கிடும் தூண்டுதல்களை அரசியல் கட்சிகள் தவிர்த்திட வேண்டும்” என்று தததுவத்தையும் உதிர்த்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
விலையேற்றம் மக்கள் பிரச்சனையல்லவா? அதனைக்கூட அரசியலாக்காமல் வேறு எதைத்தான் அரசியலாக்குவது? அரசியலே தெரியாத பிரதமர் இவர் என்று அத்வானி கூறியதை நிரூபிப்பது போலல்வா உள்ளது மன்மோகன் சிங்கின் அறிக்கை!
விலையேற்றத்தைக் காட்டி அரசியல் கட்சிகளா மக்களை அச்சறுத்த வேண்டும்? சந்தைக்குப் போய் காய்கறி முதல் மளிகை பொருட்கள் வரை வாங்கிப் பார்த்தாலே அவர்களுக்கு தூக்கம் போய்விடுமே.
|