இந்தியாவின் ஆன்மா கிராமத்தில்தான் உள்ளது என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால் நமது அரசுகளால் அதிகம் புறக்கணிக்கப்படும் பகுதி எதுவென்று கேட்டால், கிராமம்தான் என்று நறுக்கென்று கூறிவிடலாம்.
பேச்சு, பிரச்சாரம், திட்டம், அறிவிப்பு என்று எல்லாமே கிராமிய மணம் வீசும். விவசாயிகள் தற்கொலை, மழை வெள்ளத்தால் பயிர்கள் நாசம், புதிதாக பிறந்த பூச்சிகளால் தென்னைக்கு தொல்லை, திடீரென்று வீசிய புயல் காற்றால் வாழை தோட்டங்கள் அடியோடு நாசம் என்று நமது கிராம வாழ்வு சந்திக்கும் சோதனைகள் ஏராளம்.
இப்படி நாளுக்கு நாள் நொந்து நூலாகும் கிராமத்தானுக்கு சாவு இப்படித்தான் வரும் என்று அறுதியிட்டுக் கூற எமனாலும் முடியாது. தற்கொலையில் இருந்து அவன் தப்பித்தாலும், சாவு எப்போதும் அவனை துரத்திக் கொண்டேயிருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் இன்று வெளிவந்துள்ள ஒரு செய்தி.
பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் சமீபத்தில் பெய்த மழையின் போது இடி தாக்கி ஆதி திராவிட பெண் ஒருவர் உயிரிழந்தார் என்றும், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு இயற்கை இடர்பாட்டு நிதியில் இருந்து ரூ. 1 லட்சமும், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரமும் சேர்த்து மொத்தம் ரூ.1,50,000 நிதியுதவி அளிக்கப்படும் என்பதே அந்தச் செய்தி.
மண் சுவர் எழுப்பி, அதன் மீது குடிசை போட்டு வாழ்ந்துவரும் கிராம மக்கள் பலர், மழைக் காலத்தில் மண் சுவர் இடிந்து விழுந்து பலியான கதைகள் செய்திகளாக வந்து கொண்டுதானிருக்கிறது.
அதோடு, இடியால் (மின்னல் தாக்கி) உயிரிழப்போர் மிக அதிகம். வயலில் வேலை செய்யும் போதோ அல்லது கழனிக் காட்டில் நடந்து வரும் போதோ இடி மின்னலுடன் மழை பொழியும் போது இப்படி அகால மரணங்கள் சர்வ சாதாரணமாக நிகழ்கிறது.
இடி மின்னலுடன் நகரங்களிலும்தான் மழை பெய்கிறது. ஆனால் மின்னல் தாக்கி இறப்பவர் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. இதற்குக் காரணம், உயரமான கட்டடங்கள், தகவல் தொடர்பு கோபுரங்கள், கோயில் கோபுரங்கள் போன்றவற்றின் உச்சியில் அமைக்கப்படும் இடி தாங்கிகளே.
|