'ஸ்கார்லெட் தண்ணீரில் மூழ்கி இறந்து போனார்' என்று தொடக்கத்திலேயே விசாரணையை முடித்துக் கொள்ள முனைந்தது கோவா காவல்துறை.
ஆனால், விவகாரம் பூதாகரம் ஆகவே தீவிர விசாரணையில் ஈடுபட்ட கோவா காவல்துறை, 'அதிக அளவில் போதைப் பொருள் எடுத்துக்கொண்டதாலும், தண்ணீரில் மூழ்கியதாலும் ஸ்கார்லெட் இறந்தார்' என்று தற்போது புதிய விளக்கத்தை அளித்துள்ளது.
இந்த வழக்குத் தொடர்பாக பிளாசிடோ கார்வலோ மற்றும் சாம்சன் டி செளஸா ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ௦தண்ணீரில் மூழ்கி இறப்பதற்கு முன் அச்சிறுமியை இருவரும் கற்பழித்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்ற தகவலும் கோவா காவல்துறை வாயிலாகவே கிடைத்துள்ளது.
இந்தியா முதல் இங்கிலாந்து வரை கவனத்தைப் பெற்ற இவ்விவகாரத்தின் பின்னணியை முதலில் பார்ப்போம்.
இங்கிலாந்திலிருந்து சுற்றுலாவுக்காக ஃபியானோவின் குடும்பத்தினர் கோவா வந்து, விடுமுறை நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 18-ம் தேதியன்று ஃபியோனாவின் 15 வயது மகள் ஸ்கார்லெட் ஈடன் கீலிங் இறந்த நிலையில் அஞ்சுனா கடற்கரையில் மர்மமான முறையில் கிடந்தார்.
இதை விபத்து என்று வழக்கை முடிக்கவிருந்த காவல்துறைக்கு, ஸ்கார்லெட்டின் குடும்பத்தினர் நெருக்கடி கொடுத்தனர். இந்த மரணம் குறித்து சந்தேகம் எழுந்த நிலையில், இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் 'ஸ்கார்லெட் கற்பழிக்கப்பட்ட பிறகே இறந்திருப்பது' தெரிய வந்தது. அச்சிறுமியின் உடலில் 58 காயங்கள் ஏற்பட்டிருந்ததற்கான அடையாளமும் இருந்தது.
இதையடுத்து விழித்துக்கொண்ட கோவா காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டது. ஆனால், அவர்களது விசாரணையில் நம்பிக்கை இல்லாத ஃபியானோவோ, மத்திய புலனாய்வுக் கழக விசாரணைக்கு கோரினார். அதை, கோவா முதல்வர் நிராகரித்தார். அதைத் தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார் ஸ்கார்லெட்டின் தாயார்.
|