தில்லை நடராஜர் கோயில் தங்களுக்கு பட்டயமளிக்கப்பட்ட சொத்து என்று கூறி கோயிலை அபகரித்த தீட்சிதர்கள், சட்டத்தை தங்களுக்கு சாதகமாக வளைக்க உச்ச நீதிமன்றம் வரை சென்று, அக்கோயிலை உரிமையாக்கிக் கொண்ட நாள்முதல் ஆகம விதிகளுக்கு புது இலக்கணம் புகுத்தி தொடர்ந்து நிகழ்த்தி வரும் அட்டூழியம் ஆன்மிக பண்பாட்டிற்கு பெரும் இழிவை ஏற்படுத்தி வருகிறது.
மற்ற கோயில்களில் ரூ.2 கொடுத்து அர்ச்சனை சீட்டுப் பெற்றுக்கொண்டு வழிபாடு செய்துவிட்டுச் செல்லலாம். ஆனால் தில்லையில் அந்தந்த சன்னதிகளில் உள்ள தீட்சிதர்களே பக்தர்களின் ‘நிலைக்கேற்றவாறு‘ கட்டணத்தை நிர்ணயித்து அர்ச்சனை செய்வார்கள். ஒருமுறை சென்று வந்தால் போதும் மறுமுறை இக்கோயிலிற்கு வரவேண்டாம் என்று முடிவெடுப்பீர்கள். அந்த அளவிற்கு இவர்களின் அநியாய ராஜ்யம் அங்கு தடையின்றி கோலேச்சிக் கொண்டிருக்கிறது.
ஆகம விதிகள் என்று கூறி இந்தப் பூஜாரிகள் போடும் வேடங்களால் இந்து மதத்தின் உன்னத ஆன்மிக தத்துவ அடிப்படை சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
கேரளத்தில் உள்ள நம்பூதிரி வகுப்பைச் சேர்ந்த புரோகிதக் கூட்டத்தினர், தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று கூறி ஜேசுதாஸ் போன்ற பக்தர்களை அவமதிப்பதும், சிதம்பரத்தில் இந்த தீட்சிதர் கூட்டம் தேவாரம் பாடுவதால் கோயில் தீட்டாகிவிடும் என்று கூறுவதும் எந்த விதத்திலாவது இந்து (வேத) மதத்தின் ஆன்மிக அடிப்படைகளுடன் ஒத்துப்போவதாக யாராவது கூற முடியுமா?
‘ஆத்மானாம் சர்வம் பூதானி’ என்று கூறி அனைத்திலும் இருந்து இயக்குவது புருஷோத்தமனாகிய நானே என்று கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் கூறுவதை ஏற்பதா அல்லது இந்த தீட்சிதர் கூட்டம் போடும் கூச்சலில் அர்த்தம் தேடுவதா?
இந்திய நாட்டின் உயர் ஆன்மிக நெறிகளும், இங்கு தோன்றிய அருளாளர் வள்ளலார் இராமலிங்க அடிகளார், ஸ்ரீ இராமகிருஷ்ணர், விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை, பகவான் ஸ்ரீ இரமண மகரிஷி போன்ற ஆன்மிக முன்னோடிகள் நமக்கு அளித்துச் சென்றுள்ள வழிகாட்டுதல்களுக்கு முரணாக இவர்களின் அர்த்தமற்ற ஆகம கூச்சல் உள்ளது.
இதற்கு உடனடியாக விடை காண வேண்டும். இல்லையேல் இந்தியாவின் ஆன்மிகம் என்பது இப்படிப்பட்ட சுய நலக் கூட்டத்தின் அர்த்தமற்ற பேச்சுக்களலாலும், நடவடிக்கைகளாலும் திசைமாறிவிடும்.
நமது வாழ்வில் கோயில்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உன்னத இடமும் மறைந்து போகும்.
|