“சேதுக் கால்வாய் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பாதை எண் 6, 1956ஆம் ஆண்டு முதல் அப்பகுதி தொடர்பான அனைத்து அம்சங்களையும் விரிவாகவும், எச்சரிக்கையாகவும் ஆய்வு செய்த பின்னரே தேர்வு செய்யப்பட்டதாகும்” என்று கூறியுள்ள மத்திய அரசு, “அப்பகுதியின் சுற்றுச் சூழல், கப்பல் போக்குவரத்து, பொறியியல் மற்றும் கடல் எல்லை ஆகிய அனைத்து கூறுகளையும், அவற்றோடு அப்பகுதியின் மீன்வளம், மீனவர் நலன் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டே முடிவு செய்யப்பட்டது” என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றும் பாதையின் குறுக்கே அமைந்துள்ள மணல் திட்டுக்கள் இயற்கையாக அமைந்ததே என்று நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் உறுதியாகிறது என்று அம்மனுவில் கூறியுள்ள மத்திய அரசு, அப்பகுதியில் இதுவரை தொல்லியல் துறை எவ்வித ஆய்வும் மேற்கொள்ளாத நிலையில், இவ்வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களை அடிப்படையாக்க் கொண்டு முடிவு செய்யுமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது சிறப்பான சட்ட அணுகுமுறையாகும்.
இயற்கையாக அமைந்த அந்த மணல் திட்டுக்களை ராமர் பாலம் என்று கூறுவது நம்பிக்கை அடிப்படையிலானது என்றும், அதற்கு மதிப்பளிக்க வேண்டியது அரசின் கடமை என்றும் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்திருந்த மனுவிற்கு தனது வாக்குமூலத்தில் மத்திய அரசு அளித்துள்ள பதில் அரசமைப்பு ரீதியான மிகச் சரியான பதிலாகும்.
“இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அது அனைத்து மதங்களையும், மத நம்பிக்கைகளையும் மதிக்கிறது. அதே வேளையில் எந்த ஒரு மதத்தின் நம்பிக்கையையும் ஒரு மதச் சார்ப்பற்ற அரசு தனது கொள்கையாக ஏற்க முடியாது” என்றும், “பல்வேறு மதங்கள், நம்பிக்கைகள், பண்பாடுகள் கொண்ட சமூகத்தில் நம்பிக்கை தொடர்பாக எழும் பிரச்சனைகளுக்கு தீர்வு கூறுமாறு அரசை அழைக்கக்கூடாது” என்று கூறியுள்ள மத்திய அரசு, “சர்ச்சைக்குறிய இப்பிரச்சனையில் தற்பொழுது தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றமே ஒரு தீர்வைத் தரவேண்டும்” என்று கூறியுள்ளது.
தமிழர்களின் 150 ஆண்டுக்கால கனவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிராக இந்தியாவிற்குள்ளும், வெளியும் பிண்ணப்பட்ட சதி வலையின் வெளிப்பாடான ராமர் பாலம் பிரச்சனை வழக்காக்கப்பட்டதை, சட்ட ரீதியான ஒரு சரியான அணுகுமுறையின் மூலம் மத்திய அரசு தெளிவாக மேற்கொண்டிருப்பதையே உச்ச நீதிமன்றத்தில் அது தாக்கல் செய்த வாக்குமூலம் புலப்படுத்துகிறது.
|