“ஆத்மானாம் சர்வம் பூதானி” என்கிறது கீதை. இதன் பொருள் : எல்லாவற்றிலும் இறைவனே வதிகின்றான் என்பதுதானே? எல்லாவற்றிலும் என்றால்... படைப்பனைத்திலும் அவன் வதிகின்றான் என்பதுதானே பொருள். அது மட்டுமா? “தத் ஏகம்” என்பதன் அர்த்தம்தான் என்ன? எலியும், பூனையும் உலவும் இடத்தில் எனக்கு அனுமதி மறுப்பது ஏன் என்று ஜேசுதாஸ் கேட்டது வேதனைக்குரல் மட்டுமல்ல, இந்து மதத்தின் ஆன்மீக நெறிக்கு விடப்பட்ட கேள்வியுமாகும்.
குருவாயூர் கோயிலிற்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம். ஊழலில் திளைத்தவன், சொந்த நாட்டு மக்களை தனது அரசியல் வசதிக்காக கொன்று குவித்தவன் என்று யார் வேண்டுமானாலும் செல்லலாம். அவர்களுக்கு உரிய மரியாதையும் கோயில் சார்பாகவும் அளிக்கப்படும். அதிகாரத்தில் உள்ளவர்கள் அல்லவா? அதற்குரிய மரியாதை கொடுப்பார்கள் அங்குள்ள பூசாரிகள். ஆனால் ஜேசுதாஸூக்கு கோயிலிற்குள் நுழைய அனுமதி இல்லை! அங்கெல்லாம் பூசாரிகள் வைத்ததுதான் சட்டம்.
கருவறையில் உள்ள கடவுளுக்கு எப்படி பூசை செய்ய வேண்டும் என்பதைத்தான் ஆகமக விதிகள் கூறுகின்றன என்கிறார்கள். ஆனால் மற்ற மதத்தினரை (காட்டிக்கொள்ளாமல் எத்தனையோ பேர் சென்று வருகிறார்கள்) இதற்கு மேல் அனுமதியில்லை என்றும் ஆகமக விதிகள் கூறுகின்றனவா? அப்படியானால், சபரிமலையில் ஜேசுதாஸூக்கு அனுமதியுண்டு, குருவாயூர், கடம்பழா கோயில்களில் அனுமதியில்லையென்றால்... ஆகம விதி கோயிலிற்கு கோயில் மாறுகிறதா என்ன?
தங்களுடைய தான்தோன்றித்தனமான செயல்பாடுகளையெல்லாம் ஆகம விதிகளைக் காட்டித்தான் இந்தப் பூசாரிக்கூட்டம் ஒளிந்துக் கொள்கிறது (மற்ற மதங்களின் வழிபாட்டுத் தலங்களிலும் இதே கதைதான்).
இந்து மதத்தைச் சார்ந்தவர்களென்றாலும், அவர்களைக் கீழ் சாதி என்று கூறி கோயிலிற்குள் அனுமதி மறுத்த அதே மனப்பாங்குதான் இன்னமும் தொடர்கிறது. இதற்கு மேலும் இதனை அரசுகளும், பக்தர்களும் அனுமதிக்கக் கூடாது.
இதற்கு மேலும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு, இந்த இழி நிலை தொடருமானால் அது இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்திற்கு இழுக்காகி, ஆன்மீக நெறிமுறைகளின் மீது நம்பிக்கை இழக்கச் செய்துவிடும்.
|