சேது சமுத்திரத் திட்டத்திற்காக ஆழப்படுத்தப்படும் கடற்பகுதியில் உள்ள நிலத் திட்டுக்களை ராமர் பாலம் என்று பா.ஜ.க. உள்ளிட்டக் கட்சிகள் புது சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், கடல் பகுதியை ஆழப்படுத்துவதால் தமிழ்நாட்டிற்கு நிலநடுக்க ஆபத்து ஏற்பட்டுள்ளதாக "நிபுணர்கள்" சிலர் கூறியிருப்பது அடிப்படையற்ற அச்சத்தை உருவாக்கும் முயற்சியாகத் தெரிகிறது!
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சேது சமுத்திரத் திட்ட எதிர்ப்பு அமைப்பைச் சேர்ந்த சிலர் இப்படிப்பட்ட அச்சத்தை உருவாக்கியுள்ளனர்.
சேது சமுத்திரத் திட்டத்திற்காக கடலை ஆழப்படுத்துவதால், அது அப்பகுதியில் ஒரு புவியியல் ரீதியிலான சமமின்மையை ஏற்படுத்திவிடும் என்றும், அதனால் நிலநடுக்கம் ஏற்படும் ஆபத்து உருவாகும் என்றும் இந்திய புவியியல் ஆய்வுத்துறையின் முன்னாள் இயக்குநர் கோபாலாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
புவியியலை பாடமாகப் படித்தவர்களுக்கும், நிலநடுக்கம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதனை விஞ்ஞானப்பூர்வமாக நன்கு அறிந்தவர்களுக்கும் இவர் கூறுவது சற்றும் உண்மையற்றது என்பதை தெள்ளத்தெளிவாக உணர்வார்கள்.
நிலநடுக்கம் ஏற்படுவதற்குக் காரணம், கண்டங்களை (ஆசியா, ஐரோப்பா, இந்தியத் துணைக் கண்டம், ஆஸ்ட்ரேலியா, பசுபிக்) தாங்கியுள்ள புவிப் பெரும் பாறைகள் ஒன்றோடு ஒன்று நெடுங்காலமாக ஒரு தொடர்ந்த இயக்கத்தினால் உரசி ஏற்படும் ஒரு பெரும் அசைவாகும். கண்டங்களைத் தாங்கியுள்ள பெரும்பாறைகள் சந்திக்கும் இடங்களில் பெரும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அப்பகுதிகளை நிலநடுக்க அபாய (Earth Quake Prone Zones) பகுதிகள் என்று குறித்து, அதற்கென்றே தனி வரைபடங்களும் உள்ளன.
இப்படிப்பட்ட ஒரு மாபெரும் நிகழ்வை சேது சமுத்திர திட்டத்திற்காக ஒரு 13 மீட்டர் கடலை ஆழப்படுத்துவதானால் ஏற்படும் என்றுதான் இந்த நிபுணர் அச்சுறுத்தியுள்ளார்.
|