சேது சமுத்திரத் திட்டத்திற்காக ராமேஸ்வரம் கடற்பகுதியில் உள்ள நிலத்திட்டு ராமர் பாலம் என்றும், அதனை இடிக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அதனை மறுத்து தொல்லியல் துறை தாக்கல் செய்த மனுவை திருப்பப் பெற்றதும், அந்த மனுவை தயாரித்த இரண்டு மூத்த அதிகாரிகளை பணி இடை நீக்கம் செய்திருப்பதும் மத்திய அரசின் முடிவு தடுமாற்றம் என்பது மட்டுமின்றி, தவறான முன்னுதாரணமாகவும் ஆகிவிட்டது!
சேது சமுத்திரத் திட்டத்திற்காக ஆழப்படுத்தப்படும் ராமேஸ்வரத்தை ஒட்டிய கடல் பகுதியில் தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையே தொடர் நிலத் திட்டுக்களாய் உள்ள பகுதி இயற்கையாய் அமைந்ததே தவிர, அது மனிதர்களால் உருவாக்கப்பட்டதற்கான ஆதாரம் ஒன்றுமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
அந்த தொடர் நிலத் திட்டுக்களை ராமர் பாலம் என்று கூறி பிரச்சனையாக்கிவரும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளும் கூட அது இந்துக்கள் நம்பும் ராமர் பாலம் என்றும், அந்த நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும்தான் கூறுகிறார்களே தவிர, அது ராமர் கட்டிய பாலம் என்பதற்கு எந்தத் தெளிவான வரலாற்று ஆதாரத்தையும் இதுவரை முன்வைக்கவில்லை.
இந்த நிலையில்தான், இந்துக்கள் ராமர் பாலம் என்று நம்பும் அந்த நிலத் திட்டுக்களை சேது சமுத்திரத் திட்டத்திற்காக கடலை ஆழப்படுத்த சி்தைத்துவிடக்கூடாது என்று கூறி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தொடர்ந்த வழக்கில், அது குறித்து சரித்திரப்பூர்வமான, தொல்லியல் ரீதியான உண்மையை அறியவே நீதிமன்றம் விடுத்த தாக்கீதையடுத்து, இந்தியத் தொல்லியல் துறை உச்ச நீதிமன்றத்தில் விளக்க மனுவை தாக்கல் செய்தது.
தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையே உள்ள அந்த நிலத் திட்டுக்கள் மனிதனால் கட்டப்பட்டவை அல்ல, இயற்கையானதுதான் என்றும், அது ராமர் பாலம் என்பதற்கு எந்தவிதமான மறுக்க முடியாத ஆதாரம் என்று ஏதுமில்லை என்றும் தனது மனுவில் கூறியிருந்த தொல்லியல் துறை, அவதாரம் என்று கருதப்படும் ராமர் வாழ்ந்ததற்கோ அல்லது ராமாயணம் நடந்ததாகக் கூறுவதற்கோ தொல்லியல் ரீதியான ஆதாரம் ஏதுமில்லை என்று தனது மனுவில் தெளிவாகக் கூறியிருந்தது.
ஆனால், இதனை ராமர் எனும் கடவுளை மறுப்பதாக மத்திய அரசு மனு செய்துள்ளது என்று பா.ஜ.க. உள்ளிட்ட அமைப்புகள் பிரச்சனையாக்க, ஏற்கனவே அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தினால் தடுமாறிக் கொண்டிருக்கும் மத்திய அரசு, மற்றொரு பிரச்சனையை எதிர்கொள்ளத் தயங்கி, உச்ச நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற்றது.
அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு இப்படிப்பட்ட நடவடிக்கையை எடுத்தது என்று சமாதானம் சொல்லிக் கொண்ட நிலையில், அந்த மனுவை தயாரித்ததாக கூறப்பட்ட தொல்லியல் துறை உயர் அதிகாரிகளை இடை நீக்கம் செய்ததுதான் என்ன நியாயம் என்று தெரியவில்லை.
நமது நம்பிக்கைகள் என்பது வேறு. ஆனால், தொல்லியல் துறையைப் போன்ற விஞ்ஞான அடிப்படையிலான ஒரு ஆய்வு அமைப்பு நம்பிக்கைகளின் அடிப்படையில் மதிப்பீடுகளை வழங்க இயலாது என்பதை மத்திய அரசும், ஏற்கனவே ஆட்சிப் பொறுப்பில் இருந்த பாரதிய ஜனதாவும் மறந்துவிட்டுப் பேசுவதுதான் புரியாத புதிராக உள்ளது.
|