இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை தங்களால் ஏற்க முடியாது என்றும், அது தொடர்பாக அரசு மேற்கொண்டு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது என்றும், மீறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறியிருப்பது மத்திய அரசிற்கு அரசியல் ரீதியான நெருக்கடியை உருவாக்கியுள்ளது!
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு நமது நாட்டின் எதிர்கால எரிசக்தித் தேவையைக் கருத்தில் கொண்டே முன்னெடுக்கப்படுகிறது என்று பிரதமரும், நமது அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளைப் பெற இந்த ஒத்துழைப்பு அவசியமானது என்று நமது விஞ்ஞான சமூகமும் உறுதியாகக் கூறிவிட்ட நிலையில், சற்றேறக்குறைய இரண்டு ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி அதனை நடைமுறைப்படுத்துவதற்கான 123 ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி மத்திய அரசிற்கு இப்படிப்பட்ட நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசிற்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துவரும் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கூட்டணிக் கட்சிகள், அமெரிக்காவுடனான அணு சக்தி ஒத்துழைப்பை எதிர்ப்பதற்கு கூறிவரும் காரணங்கள் அனைத்தும் பிரதமர் மட்டுமின்றி, அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கரும் விளக்கமளித்துள்ளனர். நாளை நாடாளுமன்றத்தில் விதி எண் 193ன் கீழ் விவாதம் நடந்த பிறகு இறுதியாக மீண்டும் பிரதமர் விளக்கம் அளிக்க உள்ளார்.
ஆனால், அதுவரையெல்லாம் காத்திருக்காமல், அமெரிக்காவுடனான அணு சக்தி ஒத்துழைப்பை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்றும், மீறினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிரட்டியிருப்பது, கொள்கை ரீதியான கண்மூடித்தனமான நடவடிக்கையாகவே தெரிகிறது.
"நாங்கள் மார்க்சிஸ்ட்டுகள், எங்களால் ஏகாதிபத்திய அமெரிக்காவுடனான எந்தவித ஒப்பந்தத்தையும் ஜீரணிக்க முடியாது" என்றுதான் இவர்கள் சொல்லாமல் சொல்லியுள்ளார்கள். இவர்களுடைய நிலைப்பாட்டில் இந்த நாட்டின் எதிர்கால எரிசக்தித் தேவைக்கான கேள்விக்கு பதில் இல்லை. இருந்திருந்தால் நிச்சயம் அதனை நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்திருப்பார்கள். இப்படி அரசியல் தலைமைக் குழுவைக் கூட்டி விவாதித்து தான்தோன்றித்தனமாக முடிவெடுத்திருக்க மாட்டார்கள்.
|