முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » வா‌னிலை மாநாடு » கடல் நீர் அமிலமயமாகிறது - புதிய ஆய்வு (Acidification of Oceans due to CO2 is a next Major threat, says Scientists)
Bookmark and Share Feedback Print
 
கரியமிலவாயுவை கடல் நீர் உறிஞ்சும் அளவு அபாயகரமான அளவுகளில் இருந்து வருவதால் கடல் நீர் அமிலமயமாகி வருகிறது, இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கும், உலகம் முழுதுமான உணவுக்கும் நெருக்கடி ஏற்படும் என்றும் கோபன்ஹேகன் வானிலை மாநாட்டில் கலந்து கொண்ட கடலாய்வு விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று காலை நடைபெற்ற வானிலை மாற்ற பேச்சுவார்த்தைகளின் போது ஐரோப்பாவைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான விஞ்ஞானிகள் இதனை அறிவுறுத்தினர்.

கடல் நீர் அதிக அளவில் கரியமில வாயுவை உறிஞ்சி வருவதால் கடலில் மிதவை நிலையில் உள்ள உயிரினங்களின் அழிவு ஏற்கனவே நிகழ்ந்து வருகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்களின் உணவுச் சங்கிலி உடையவுள்ளது என்று இந்த விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

"கடல் அமிலமயமாதல்: உண்மைகள்" என்ற தலைப்பிடப்பட்ட இந்த அறிக்கையில், தொழிற்புரட்சி துவங்கிய காலக்கட்டம் முதல் இன்று வரை கடல் நீர் அமிலமயமாதல் 30% அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இதுவரை ஏற்பட்டுள்ள விளைவுகளை இனிமேல் சரி செய்யவியலாது என்பதோடு, இது மிக வேகமாக நிகழ்ந்து வருகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது.

கரியமில வாயு வெளியேற்ற விவகாரத்தில் நாடுகள் அசட்டை காட்டினால் பவளப்பாறைகள், மிதவை உயிரினங்கள், கடல்பாசி ஆகியவை அழிந்து அதனால் உயிர் வாழும் பல வகை மீன்கள் அழிந்து விடும்.

ஐரோப்பிய ஒன்றியம் ஆதரிக்கும் கடல்நீர் அமிலமயமாதல் மீதான ஐரோப்பிய திட்டம் என்ற 27 ஆய்வு அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் கொண்ட கூட்டமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கடல்களில் இரைச்சல் அதிகரித்து வருவதால் திமிங்கிலங்களும் டால்ஃபின்களும் இடம் பெயர முடியாமல் தவிக்கின்றன, மேலும் கடல் வாழ் உயிரினங்களுக்கு இடையேயான தொடர்பு படுத்தல் நடவடிக்கையும் பெரிய அளவு பாதிக்கப்பட்டுள்ளது, அமிலமயமாதல் அதிகரிக்கும் போது கடல் இரைச்சல் அளவு அதிகரிக்கிறது.

வட அட்லாண்டிக், வடக்கு பசிபிக், ஆர்க்டிக் கடல்கள் அமிலமயமாகும் நாள் தொலைவில் இல்லை என்று இந்த அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடல் நீர் உயிரினங்களுக்கு தேவையான கால்சியம் கார்பனேட்டின் அளவு குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குளிர்ந்த நீர் கரியமிலவாயுவை அதிகம் உறிஞ்சுவதால் கால்சியம் கார்பனேட்டின் அளவு 60% முதல் 85% வரை குறையும் அபாயம் உள்ளது. என்று கூறும் இந்த அறிக்கை 32,000 நகல்கள் எடுக்கப்பட்டு உலகம் முழுதும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்