இணைய தளங்களை இரகசியமாக சில சக்திகள் வேவு பார்ப்பதன் மூலம் உருவாகும் பிரச்சனைகள் சர்வதேச அளவில் 2008 -ம் ஆண்டில் உலக நாடுகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
சர்வதேச அளவில் பொருளாதார எல்லைகளைத் தாண்டி பல்வேறு நாடுகளும், நிறுவனங்களும் தங்களின் வணிகத்தை விரிவுப்படுத்தி வரும் நிலையில் சில நாடுகள் மற்ற நாட்டு நிறுவனங்களின் கணினி அமைப்புக்களில் ஊடுருவி, குறுக்கு வழியில் அவைகளைச் சீர்குலைக்க முயன்று வருகின்றன.
இது போன்ற நிகழ்வுகள் தற்போதும் நடைப்பெற்றுக் கொண்டுதான் உள்ளன. இவர்கள், இணையதள வங்கி சேவைகள், வேகமாக வளர்ந்து வரும் சந்தை உள்ளிட்ட பிற துறைகளை குறிவைத்துள்ளனர். இணையதளத்தின் மூலம் வேவு பார்த்து அவற்றை முடக்குவதும், வளர்ச்சிக்கான காரணிகளை தெரிந்துக் கொண்டு அந்நிறுவனங்களின் வர்த்தகத்தை நாசப்படுத்துவதும் இவர்களின் பணியாக உள்ளது.
சர்வதேச அளவில் பெருகிவரும் இணையதளக் குற்றங்களைத் தடுப்பதுடன், அது போன்ற நடவடிக்கையிலிருந்து மீள்வது தொடர்பாக, நேட்டோ, அமெரிக்க புலனாய்வு அமைப்பு, சோசா, பல்வேறு பல்கலைக் கழகங்கள், அமைப்புகள், இது தொடர்பான துறை வல்லுநர்களிடம் இருந்து திரட்டிய தகவல்கள் அடிப்படையில் நடத்தப்பட்ட மெக் ஆஃப்பி குற்றவியல் ஆய்வில் 2008 -ல் இணையதளக் குற்றங்கள் பெரிய சவாலாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது.
இணையதளங்கள் மூலம்வேவு பார்த்தல், தாக்குதல் தொடுக்கும் வேலைகளில் சில அரசுகளும், அதன் அமைப்புகள் - குழுக்களும் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. நாடுகளின் முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளான மின்சாரம், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம், நிதிச்சந்தைகள், அரசுகளின் இணையதளங்கள் ஆகியவை இவர்களின் இலக்குகள் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது 120 நாடுகள் இணையதளத்தை வேவுபார்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.
|