சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி:டெலிகாம் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன
வியாழன், 2 பிப்ரவரி 2012( 15:30 IST )
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொடர்பான நிறுவனங்களின் பங்குகள் இன்று மும்பைப் பங்குச் சந்தையில் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
2008ஆம் ஆண்டு ஊழல் நிரம்பிய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான 122 உரிமங்களை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து பங்குச் சந்தையில் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
யூனிநார் நிறுவனத்தின் புரோமட்டர் நிறுவனமான ரியல்டி நிறுவனம் யூனிடெக் நிறுவனத்தின் பங்குகளின் விலை 14% வீழ்ச்சியடைந்து பங்கு ஒன்றின் விலை ரூ.23.20ஆகச் சரிந்தது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 9.31% சரிந்து பங்கு ஒன்றின் விலை ரூ.91.05ஆக சரிவடைந்தது.
டிபி ரியல்டி நிறுவனத்தின் பங்குகள் 8.62%-ம், வீடியோகான் நிறுவனத்தின் பங்குகள் 4.29%-ம் சரிவு கண்டன.
வங்கிகளின் பங்குகளும் இன்று பெரும் சரிவு கண்டன, எஸ்.பி.ஐ. பங்குகள் சுமார் 5% சரிவடைந்தது. டெலிகாம் நிறுவனத்துடன் எஸ்.பி.ஐ. தொடர்பு வலுவாக இருப்பதால் இந்தத் தீர்ப்பின் எதிரொலி எஸ்.பி.ஐ. பங்குகளிலும் தாக்கம் செலுத்தியது.
மாறாக பார்தி ஏர்டெல் நிறுவனப்பங்குகள் 8% அதிகரிப்பு கண்டது. ஐடியா செல்லுலார் நிறுவன பங்குகள் 6.85%, மகாராஷ்டிரா டாடா டெலிகாம் பங்குகள் 1.53%-ம் அதிகரிப்பு கண்டன.
ஆனால் ஆர்.காம் உரிமங்கள் 2001ஆம் ஆண்டும் அதற்கும் முந்தைய காலத்திலும் வழங்கப்பட்டதால் உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் ரிலையன்ஸிற்கு பாதிப்பில்லை என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆ.ராஜா 2008ஆம் ஆண்டு முதல் வருகை அடிப்படையில் வழங்கிய உரிமங்களில் உனிநார் நிறுவனத்திற்கு 22 அனைத்திந்திய உரிமங்கள் கொடுக்கப்பட்டது. லூப் நிறுவனத்திற்கு 21 உரிமங்களும், சிஸ்டெமா-ஷியாம் நிறுவனத்திற்கு 21 உரிமங்களும், எடிஸ்டாட் டிபி நிறுவனத்திற்கு 15 உரிமங்களும், எஸ்.டெல் நிறுவனத்திற்கு 6 உரிமங்களும், வீடியோகானின் நிறுவனத்திற்கு 9 உரிமங்களும், ஐடியா மற்றும் டாடா நிறுவனக்களுக்கு முறையே 9 மற்றும் 3 உரிமங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உரிமங்கள்தான் தற்போது ரத்து செய்யப்பட்டது.