புது டெல்லி: , புதன், 25 நவம்பர் 2009( 15:07 IST )
தேசிய வேளாண் காப்பீடுத் திட்டத்தின் கீழ் 13 கோடியே 47 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,48,258 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் பேராசிரியர் கே.வி. தாமஸ் தெரிவித்தார்.
மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளிக்கையில், ரபி பருவம் 1999-2000 முதல் ரபி பருவம் 2008-09 வரை தேசிய வேளாண் காப்பீடுத் திட்டத்தின் கீழ் ரூ.1,48,258 கோடிக்கு, சுமார் 2109 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்புக்கும் கூடுதலாக பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் 13.47 கோடி விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்.
இதே போல பருவ நிலை அடிப்படயிலான பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் 2007 கரீப் பருவம் முதல் 2009 கரீப் பருவம் வரை ரூ.4,622 கோடிக்கு 34 லட்சம் ஹெக்டேர்கள் நிலப்பரப்புக்கும் கூடுதலாக பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் 25 லட்சம் விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.