காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிப்பதாக, தமிழ்நாடு மரபுசாரா எரிசக்தித் துறை நிர்வாக இயக்குநரும், அரசுத்துறைச் செயலருமான கிறிஸ்துதாஸ் காந்தி தெரிவித்தார். மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்திய அளவில் காற்றாலை மூலம் தயாரிக்கப்படும் மின் உற்பத்தியில், 40 விழுக்காடு தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது தமிழகத்தின் மொத்த மின் தேவையில் 30 விழுக்காடு காற்றாலை மூலம் செய்யப்படும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் இருந்து பயன்படுத்தப்படுகிறது. பயோ-கேஸ் மற்றும் சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்துவதற்கு, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பயோ-கேஸ், சூரியசக்தி மூலம் மின்உற்பத்தி செய்து பயன்படுத்துவது குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட 60க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம், மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதேபோல, ஒரு சில அரசு மருத்துவமனைகளில் சூரியசக்தி மூலம் இயங்கும் வாட்டர் ஹீட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்து அரசு மருத்துவமனைகளில் இம்முறையை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.